ரயில் தலையணை கவரில் கூட தமிழ்… ஆனால் பி.எம் ஸ்ரீ பள்ளியில் இல்லை – அருண் நேரு குற்றச்சாட்டு!

Published On:

| By christopher

kn arunnehru point out no tamil teacher at pm shri school

ரயில் தலையணை கவரில் மும்மொழி இடம்பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பி.எம் ஸ்ரீ பள்ளிகளில் மாநில மொழியான தமிழை சேர்க்க மத்திய அரசு மறுக்கிறது என திமுக எம்.பி அருண் நேரு குற்றஞ்சாட்டியுள்ளார். kn arunnehru point out no tamil teacher at pm shri school

மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக தமிழக அரசு தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் 49 பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒன்றில் கூட ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை என தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலன் தெரிவித்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே தொடரும் என்றும், இந்தியை கட்டாயப்படுத்தும் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் திமுக பெரம்பலூர் எம்.பி அருண் நேரு பரபரப்பு குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார்.

தமிழ் மொழியை கற்பிக்க விருப்பமில்லை! kn arunnehru point out no tamil teacher at pm shri school

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் “ஒன்றிய அரசின் மொழி கொள்கையில் தமிழ்நாட்டிலும் கூட தமிழ் மொழிக்கு இடமில்லை என்பது PM Shri கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் (முன்னர் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்) மூலம் மீண்டும் தெளிவாகிறது.

திருச்சிராப்பள்ளியில் உள்ள PM Shri கேந்திரிய வித்யாலயா எண் 2, 2025-26 கல்வியாண்டிற்கான ஒப்பந்த ஆசிரியர் பணியிடங்களுக்காக நேர்காணல் அறிவிப்பை கடந்த 16ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இதில்: PGT (பட்டதாரி ஆசிரியர்): பொருளாதாரம், ஆங்கிலம்
TGT (பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்): இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் PRT (முதன்மை ஆசிரியர்): பொது மற்றும் இசைபோன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் என தெரிவித்தது.

ஆனால், தமிழ் மொழிக்கு எந்த பணியிடமும் குறிப்பிடப்படவில்லை. இது தமிழ்நாட்டின் மொழியை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கற்பிக்க விருப்பமில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், RTI தகவல்களின்படி, தமிழ் ஆசிரியர்கள் இல்லை, ஆனால் இந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்கள் பெருமளவில் உள்ளனர். இந்த பள்ளிகள் தற்போது PM Shri என்ற பெயரில் மறுபெயரிடப்பட்டு, தேசிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) மற்றும் அதன் மும்மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில், இந்த பள்ளிகள் இன்னும் இருமொழி கொள்கையை (இந்தி மற்றும் ஆங்கிலம்) மட்டுமே பின்பற்றுகின்றன. தமிழ்நாட்டின் மொழியான தமிழை கூட அவர்கள் கற்பிக்க விரும்பவில்லை. ஆனால் இப்பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது.

சமீபத்திய நிகழ்வுகளில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் NEP 2020 வலியுறுத்தும் மும்மொழி கொள்கையை பின்பற்றி செயல்படும் PM Shri பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடவில்லை என்ற காரணத்தால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (SSA) மூலம் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய 2000 கோடி அளவிலான நிதியை நிறுத்தி வைத்து, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.

இது தமிழ்நாட்டின் மொழியியல் அடையாளத்தையும், தமிழ் மக்களின் உரிமைகளையும் புறக்கணிப்பதாகும். தமிழ்நாடு இரு மொழி கொள்கையை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பின்பற்றுகிறது, மற்றும் இந்தியை திணிக்கும் முயற்சியாக NEP 2020-ஐ எதிர்க்கிறது. ஆனால் மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் ஒன்றிய அரசு, தனது சொந்த பள்ளிகளில் கூட மாநில மொழியான தமிழை சேர்க்க மறுக்கிறது.

ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் பண்பாட்டையும் மொழியையும் மதிக்க வேண்டும். PM Shri கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும், மேலும் SSA நிதிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

ரயில் தலையணை கவரில் மும்மொழி!

இந்த நிலையில் தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொதுவாக நாட்டில் ரயில்களில் கொடுக்கப்படும் போர்வை தலையணை கவர்களில் உள்ள வார்த்தைகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்பட்டிருக்கும்.

இந்த நிலையில் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 13 ரயில்களின் ஏசி பெட்டிகளில் கொடுக்கப்படும் போர்வை தலையணை கவர்களில் தமிழ் உட்பட மும்மொழிகள் இருக்க வேண்டும் என அதனை வழங்கி வரும் ஒப்பந்த நிறுவனத்திற்கு தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் உத்தரவிட்டுள்ளது. இது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share