Video : காதலை மறுத்ததால் வெறியாட்டம்! கல்லூரிப் பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. பகீர் கிளப்பும் வீடியோ

Published On:

| By Pandeeswari Gurusamy

Fire

கோவை தொண்டாமுத்தூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது, பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசி எறிந்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கல்லூரியில் படித்து வந்த போது சென்னையைச் சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் என்ற இளைஞருடன் பழகியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கார்த்திக் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 31-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது அந்த இளம்பெண்ணுக்குத் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், கார்த்திக்குடனான பழக்கத்தை முற்றிலும் துண்டித்துக் கொண்டுள்ளார். பெண்ணின் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த கார்த்திக், தொடர்ந்து அந்த இளம்பெண்ணுக்குப் பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை கார்த்திக் தனது நண்பர்கள் 3 பேருடன் கேடிஎம் மற்றும் பல்சர் ஆகிய இருசக்கர வாகனங்களில் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்த பெண்ணின் தந்தையைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

அப்போது, தாங்கள் மறைத்து வைத்திருந்தபெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை வீட்டின் மீது சரமாரியாக வீசியுள்ளனர். இதில் ஒரு பாட்டில் வெடித்து, வீட்டின் முன்பகுதியில் இருந்த செருப்பு ஸ்டாண்ட் மீது விழுந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த கேன்வாஸ் ஷூக்கள் மட்டும் எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குண்டு வீசிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், கார்த்திக் மற்றும் அவனது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடினர்.

இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகார் அடிப்படையில், தொண்டாமுத்தூர் காவல்துறையினர் கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT

இது குறித்து பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில், “கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பதைபதைக்க வைக்கிறது. அமைதி பூங்காவாக திகழ்ந்த கோவை மாநகரம் இன்று கஞ்சா, போதை பொருள் கடத்தல், பயங்கரவாதிகள் நடமாட்டம், சட்டம் ஒழுங்கு சீர் குலைவு என இருக்கும் அத்தனை குற்றங்களின் புகலிடமாகத் திகழ்வது காவல் துறை தனது பணியை சரிவர செய்கிறதா என்ற சந்தேகத்தை அளித்துள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் மீது இதற்கு முன்பாக 31 குற்ற வழக்குகள் பதிவாகி இருப்பதாக கூறப்படும் செய்தி மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.

தினந்தோறும் இப்படி சட்டம் ஒழுங்கு சீர்குலைவு சம்பவங்களால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் அவர்களே பொதுமக்களும், பெண்களும் அச்சமின்றி நடமாடும் வகையில் ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share