40 பேர் பலியான கரூர் துயரம்: மவுனம் கலைத்த ஆதவ் அர்ஜூனா- நள்ளிரவில் திடீரென போட்ட ‘ட்வீட்’

Published On:

| By Mathi

TVK Aadhav Arjuna

“என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்” என்று தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

கரூரில் நேற்று முன் தினம் (செப்டம்பர் 27) தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசாரம் செய்தார். அந்த பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியாகினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவையும் போலீஸ் தேடுவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் இன்று அதிகாலை தமது எக்ஸ் பக்கத்தில் ஆதவ் அர்ஜூனா பதிவிட்டுள்ளதாவது: என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்… இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது.

மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருகிறேன்.

ADVERTISEMENT

ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள். இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை.

இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன்.

துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன்.

ADVERTISEMENT

‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
இறுதியில் தர்மமே வெல்லும்!’

இவ்வாறு ஆதவ் அர்ஜூனா பதிவிட்டுள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share