இளையராஜாவை கேலி செய்ததா சூர்யாவின் ‘கருப்பு’? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு!

Published On:

| By Pandeeswari Gurusamy

karuppu

இசையமைப்பாளர் இளையராஜாவிடம் சூர்யாவின் ‘கருப்பு’ படக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது.

இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் நடிகை திரிஷா நாயகியாக நடித்துள்ள நிலையில், ஆர்.ஜே.பாலாஜி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனாகா, மாயா ரவி, இந்திரன் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

ADVERTISEMENT

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம், வெளியான 4 நாட்களில் ரூ.141.30 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவை அவமதிக்கும் வகையில் ஒரு காட்சி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டப்பட்டது.

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் போராட்டக் காட்சியில், இளையராஜா இசையில் உருவான “போராடடா ஒரு வாள் ஏந்தடா” என்ற பாடலை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாகவும், அதனால் இளையராஜா வழக்கு தொடர்வதாகவும் ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சி இளையராஜாவை கேலி செய்யும் வகையில் இருப்பதாகக் கூறி அவரது ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ADVERTISEMENT

இந்த விவகாரம் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், ‘கருப்பு’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதிப்பிற்குரிய இசைஞானி இளையராஜா ஐயாவிற்கு, ‘கருப்பு’ திரைப்படத்தில் தங்களது பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியைக் கடத்தும் நோக்கத்திற்காகக் கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே. 50 வருடங்களுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்கு சிறிதளவும் இல்லை. உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட காட்சியினால் தாங்களோ, தங்களைச் சார்ந்தவர்களோ, இசைஞானியின் ரசிகர்களோ அல்லது பிறரோ மனம் புண்பட்டிருந்தால், அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share