சென்னையில் வாழ்ந்து மறைந்த 5 ரூபாய் டாக்டரின் வாழ்க்கைதானா ரஜினிகாந்தின் (Rajinikanth) 173-வது படமான தர்மன்? என படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் தர்மன் படத்தின் தொடக்க விழாவில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசியதாவது: இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் வைத்துப் படம் இயக்க வேண்டும் என்பது திரையுலகில் உள்ள அனைத்து உதவி இயக்குநர்களின் ஆசையாகும். அத்தகைய சிறப்புமிக்க தலைவரின் படத்தை, கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பில் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ (RKFI) நிறுவனத்தில் இயக்குவது ஒரு வரலாற்று நிகழ்வாகவே நான் கருதுகிறேன். இந்த வரலாற்றில் நானும் எனது குழுவும் ஒரு அங்கமாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இதை நான் வெறும் படமாக மட்டும் பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள எண்ணற்ற உதவி இயக்குநர்கள் மற்றும் வளர்ந்து வரும் திரைப்படக் கலைஞர்களின் கனவு இது. அவர்களின் சார்பாக, இந்தப் படத்தை மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் இயக்குவேன் என்று உறுதியளிக்கிறேன். இந்தப் படம் அமைவதற்கு முக்கியக் காரணமான மகேந்திரன் சார் மற்றும் டிஸ்னி சார் ஆகியோருக்கு எனது நன்றிகள். அவர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தூண்களாக இருந்து, எனக்குத் தொடக்கம் முதலே ஆதரவாக இருந்து வருகிறார்கள். தயாரிப்பு நிறுவனத்திற்குப் பாரமாக இருக்காமல், அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து சிறந்த படத்தை வழங்க விழைகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய ஏஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சிலம்பரசன் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி. எட்டு பாடல்கள் கொண்ட இந்தப் படத்தில், ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ஜானரில் அமையவிருக்கிறது. தலைவரின் அறிமுகப் பாடல் உள்ளிட்ட அனைத்தையும் அனிருத்துடன் இணைந்து உருவாக்குவதை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒளிப்பதிவாளர் நிகேட், கலை இயக்குநர், சண்டைப்பயிற்சி அறிவு மாஸ்டர் எனப் பெரிய குழுவே இதற்காக உழைத்து வருகிறது. மேலும், இந்தப் படத்தில் ஸ்ருதியை அறிமுகப்படுத்துவதிலும், சிம்ரன் மேம், ராஷிக் அண்ணா உள்ளிட்ட பல திறமையான கலைஞர்களுடன் பணிபுரிவதிலும் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளேன்.
கமல் சார் அவர்களை முதன்முதலில் சந்தித்தபோது எனக்குள் பயம் இருந்தது. ஆனால், அவர் மிகவும் இயல்பாக, ‘நான் ரஜினியின் ரசிகன், ரஜினியை வைத்துப் படம் பண்ணுங்கள்’ என்று கூறியது எனக்குப் பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது. ரஜினி சார் அவர்களுடன் பேசும்போதும், அவர் 50 ஆண்டுகால அனுபவம் கொண்டவராக இருந்தாலும், அறிமுக இயக்குநர் போலவே ‘ஜெயிச்சே ஆகணும்’ என்று உற்சாகப்படுத்துவார். இரவு 11 மணிக்கு நான் அழைத்தாலும் அவர் உரையாடத் தயங்கியதில்லை. அவர் எனக்கு ஒரு அசோசியேட் டைரக்டர் போலப் பக்கபலமாக இருந்து ஆலோசனைகளை வழங்கினார்.

இறுதியாக, இதைப் பற்றிய சிறிய விளக்கம்: இது ‘5 ரூபாய் டாக்டர்’ வாழ்க்கை வரலாறு திரைப்படம் அல்ல. இது ‘டாக்டர் ஸ்வாக்’ எனும் பெயரில் தர்மன் என்ற கதாபாத்திரத்தைக் கொண்ட, குடும்பப் பின்னணியுடன் கூடிய ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் திரைப்படம். ‘படையப்பா’ மற்றும் ‘வேட்டையாடு விளையாடு’ ஆகிய படங்களின் பாணியில் ஒரு சுவாரஸ்யமான கலவையாக இந்தப் படம் அமையும்.
