”தாம் பேசினாலும் பேசாமல் இருந்தாலும் பிரச்சனையாகிவிடுகிறது” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

இந்த படத்தை ஓ மை கடவுளே, டிராகன் படங்களை இயக்கிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.
சென்னையில் இப்படத்தின் பெயர் அறிவிப்பு, ஃபர்ஸ்ட் லுக் அறிமுகம் மற்றும் தொடக்க விழா இன்று ஜூன் 24-ந் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: மேடைக்கு என்னை அழைக்கிறார்கள் என்று சொன்னாலே ஒரு தயக்கம் ஏற்படுகின்றது. நான் பேசினால் பிரச்சனை, பேசவில்லை என்றாலும் பிரச்சனை. நான் அமைதியாக இருந்தால், ‘என்ன பேசவே மாட்டேங்குறார்? வாயில் என்ன கொழுக்கட்டை வைத்திருக்கிறாரா?’ என்று கேலி செய்கிறார்கள். பேசினால், ‘இப்போது ஏன் பேசுகிறாய்?’ என்று கேட்கிறார்கள். என்ன செய்வது என்று புரியவில்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டேன். நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது. நம்மைப் பிடிப்பதைக் கூட அவர்கள் தவறாகவே பார்ப்பார்கள். எனவே, எல்லோருடைய திருப்திக்காகவும் நாம் வாழ முடியாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

கமல்ஹாசன் அவர்களுக்கும், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
இந்த அலுவலகத்தைத் திறந்தபோதே, கமல்ஹாசன் என்னிடம் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படம் பண்ண வேண்டும் என்று கேட்டார். அதுமட்டுமல்லாமல், கதையைப் பற்றியோ அல்லது படப்பிடிப்பு குறித்த விவரங்களையோ நான் கேட்க வேண்டாம், அனைத்தையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன் என்று அவர் என்னிடம் முழு பொறுப்பையும் ஒப்படைத்தார். அத்தகைய ஜாம்பவான் என் மீது வைத்திருந்த நம்பிக்கை எனக்குப் பெரிய பொறுப்பை உணர்த்தியது. பிறகு, அவரிடமே அந்தக் கதையை முழுமையாகக் கேட்டு, அவர் ஓகே சொன்ன பிறகுதான் இந்தப் படத்தைத் தொடங்கினோம்.
இந்தப் படம் ஒரு தனிநபர் முயற்சியல்ல; இது ஒரு குழு முயற்சி ஒட்டுமொத்தக் குழுவும் வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு உழைக்கிறோம். அஸ்வத் மாரிமுத்துவின் ‘டிராகன்’ படத்தைப் பார்த்திருக்கிறேன், அவர் மிகத் திறமையான இயக்குநர். இந்தப் படம் சிறந்த முறையில் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கமல்ஹாசனுக்கும் எனக்கும் இடையேயான நட்பு பற்றிச் சொல்லி மாளாது. 1975-77 காலகட்டங்களில் நான் திரையுலகிற்குப் புதிதாக வந்திருந்தபோது, அவர் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தார். ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ போன்ற படங்களில் எனது வளர்ச்சிக்கு அவர் பெரிதும் உறுதுணையாக இருந்தார். அவர் எனக்குச் செய்த உதவிகளையும், ஆலோசனைகளையும் நினைவுகூர்கிறேன். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், அதே சமயம் பெரிய பொறுப்பையும் அளிக்கிறது.
படத்தில் சிம்ரன் நடித்திருப்பது கூடுதல் சிறப்பு. அனிருத்தின் இசை மற்றும் மகேந்திரனின் நிர்வாகத் திறமை ஆகியவை இந்தப் படத்திற்குப் பெரிய பலம். குறிப்பாக, கமல்ஹாசன் போன்ற ஒரு படைப்பாளருக்கு மகேந்திரன் போன்ற ஒருவர் துணையாக இருப்பது மிகவும் அவசியம். அவரது நிர்வாகத்தில் இந்தப் படம் ஒரு மைல்கல்லாக அமையும் என்று நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
