நடிகர் ரஜினிகாந்தும் தாமும் இணைந்து பணியாற்றுவதற்காக 40 ஆண்டுகளாக கதை தேடினோம் என்று நடிகரும் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் (Kamal Haasan) தெரிவித்தார்.

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173-வது படம் “தர்மன்”. இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.
இப்படத்தின் தொடக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: கைகளை நான் காண்பித்தது என்னுடைய 100-வது படத்துக்கான அடையாளமாகும். நீங்கள் கை கூப்பி வருவது போலவே, அந்தத் தருணத்தை இப்போதும் நான் பெருமையுடன் நினைவு கூர்கிறேன். நன்றி. இப்படம் தயாரிக்கும் வரை என்னை மார்க்கெட்டில் நிலைநிறுத்தியதற்காகத் திரையுலகிற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் நட்பு, சில ஆண்டுகளிலேயே சமமான நிலையை எட்டியது. அவர் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலும், இரண்டு ஆண்டுகளில் இருவரும் ஒரே நிலைக்கு வந்துவிட்டோம்.
நாங்கள் இருவரும் பம்பாய்க்கு விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பு அப்போதுதான் கிடைத்தது. பல வாய்ப்புகள் எங்களைத் தேடி வந்தன. அந்த விமானப் பயணத்திலேயே, ஒரு படம் இணைந்து செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்தோம். அதற்காகக் கதை தேடும் பணி 40 ஆண்டுகள் தொடர்ந்தது. சமீபத்தில் இந்த அலுவலகத்தைத் திறக்கும்போதுதான் மீண்டும் அதைப் பற்றிப் பேசினோம். கதை அமைந்ததும் இரண்டு படங்கள் செய்யத் திட்டமிட்டோம்.
ஏவிஎம் வேப்ப மரத்தடியில் அமர்ந்திருந்த அந்த இளைஞர்கள் இவ்வளவு தூரம் பயணித்திருப்பது யாருடைய கருணை என்று தெரியவில்லை. யாருடைய கருணையாக இருந்தாலும், அதற்கு நாங்கள் இருவரும் தலைவணங்குகிறோம்.
இவ்வளவு பெரிய உயரத்தை எட்டுவோம் என்று நாங்கள் நினைக்கவில்லை. எங்களை இவ்வளவு பெரிய இடத்திற்கு உயர்த்தி வைத்தது ரசிகர்களாகிய நீங்கள்தான். அதற்கு நாங்கள் என்றென்றும் நன்றி உடையவர்கள். இப்படம் தயாராகும் போது, தயாரிப்பாளர் ஓடி ஆடுவார், ஹீரோ சந்தோஷமாக இருப்பார் என்று சொல்லுவார்கள்.

இதை முன்னெடுத்துச் செல்லும் மகேந்திரனின் செயல்பாடு, சந்திரஹாசனுக்கு ஒரு சிறந்த வாரிசு கிடைத்துள்ளதை உணர்த்துகிறது. இந்தத் திறமையை நம்பி, இந்தத் திட்டத்தை இயக்குநரிடம் ஒப்படைத்திருக்கிறோம். இந்தப் பொறுப்பை அவர் திறம்படச் செய்ய வேண்டும். சிறந்த படங்கள் இக்கால கட்டத்திற்குத் தேவை. இந்தப் படம் முதலீடு செய்யப்பட்டிருப்பதால், கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். ஒட்டுமொத்தத் திரைத்துறையின் சூழல் சரியாக இருக்க, அனைத்துப் படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
