முதல்வர் விஜய் வணிகத் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல, முதலில் கொடூரக் கொலைகள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் தனது ‘கதாநாயக சாகசங்களை’ காட்டலாம் என்று ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா என கனிமொழி எம்பி காட்டமான வகையில் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் மேற்கு மாட வீதியில் பிரதீப் ராஜ் என்ற இளைஞர் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் கூறிய நிலையில் மறுநாளே அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் பதிவில், “தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொலை! இப்படி நாள்தோறும் தொடரும் கொலை கொள்ளை சம்பவங்களால் ஒரு சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள், தான் ஒரு முன்னாள் கதாநாயகன் என்பதால், வணிகத் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல, முதலில் கொடூரக் கொலைகள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் தனது ‘கதாநாயக சாகசங்களை’ காட்டலாம் என்று ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா என்ற குழப்பமும் மக்களிடையே எழுகிறது.
இச்சம்பவம் குறித்து முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில்,”சென்னை திருவொற்றியூரில் கந்துவட்டி தகராறில் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி காவல் துறையில் புகார் கொடுத்த பிரதீப் ராஜ் என்ற இளைஞர் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் இவ்வழக்கில் உயிரிழந்த இளைஞர், காவல் ஆய்வாளர் மீதும் குற்றச்சாட்டு வைத்திருப்பதாகக் கூறப்படுவதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
தனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று புகார் கொடுத்தும் அதனை அலட்சியமாகக் கருதியதன் விளைவாக ரவுடிகளால் ஓர் உயிர் பலியாக்கப்பட்டிருப்பது காவல்துறை, பொதுமக்களையும், சட்டம் ஒழுங்கையும் எந்த அளவிற்கு பாதுகாக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இச்சூழலில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு குறித்து சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீது முதல்வர் விஜய் அவர்கள் பதிலளிப்பார் என்று எதிர்பார்த்தால் மக்கள் பிரச்சினைகளை விடுத்து 50 வருட பழங்கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறார்.
இப்படி தினந்தோறும் ரவுடிகளின் அட்டகாசமும், ஆயுதக் கலாச்சாரமும் மாநிலத்தில் பெருகிவரும் சூழ்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு என்பது முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது கவலையளிக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. முன்பிருந்த ஆட்சியை விட தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இன்னும் படுபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது என்பது புலனாகிறது. மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவல்ல முதல்வர் அவர்களே..! முற்றிலும் ஏமாற்றம் தான் மிஞ்சியிருக்கிறது..!” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பதிவில், “புகார் அளிக்க வந்த இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காவல் ஆய்வாளர்; புகார் அளித்த மறுநாளே படுகொலை செய்யப்பட்ட இளைஞர் – ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் ஒவ்வொரு காரணம் கூறும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், இக்கொலைக்கு சொல்லப்போகும் காரணம் என்ன?
சென்னை, திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பொய் வழக்குப் பதிவு செய்து தன்னை கைது செய்யவுள்ளதாகவும் இளைஞர் பிரதீப் ராஜ் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு மறுநாளே அவர் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
“சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு உற்ற நண்பனாகவும், சட்டத்தை மீறுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் காவல்துறை இருக்க வேண்டும்” என்று முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் காவல்துறையைப் பாராட்டிப் பேசிய இரண்டு நாட்கள்கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மிரட்டியதாகப் புகார் தெரிவித்த நபர் அடுத்த நாளே படுகொலை செய்யப்பட்டிருப்பது, காவல்துறை முதலமைச்சரின் முழுமையான கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறதா என்ற கேள்வியையும், காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.
குடும்பப் பிரச்னை, சொத்துத் தகராறு, முன்விரோதம், பழிவாங்கும் மனநிலை என தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நிகழும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் வெவ்வேறு காரணங்களைக் கூறி, அவை சட்டம் ஒழுங்குடன் தொடர்பில்லாதவை என்பது போல் சித்தரிக்கும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் இளைஞர் பிரதீப் ராஜ் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவத்திற்கும் சொல்லப்போகும் காரணம் என்ன?
எனவே, தமிழகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்குப் பின்னரும் புதுப்புது காரணங்களைத் தேடாமல், குற்றச் சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பாகவே அவற்றைத் தடுக்கும் வகையில் காவல்துறையைச் செயல்படச் செய்து, சட்டம் ஒழுங்கைப் பேணிக் காத்து, தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட முன்வர வேண்டும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
