”ஜாய் ஆலுக்காஸிடம் அதிக தங்கம் இருக்கலாம்” : டெண்டரை எதிர்த்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Kavi

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்க மோதிரம் அளிக்கும் திட்டத்தை தமிழக வெற்றிக் கழக அரசு அறிவித்தது.

ADVERTISEMENT

4,41,667 தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் கோரியது.

இந்த நிலையில் தங்கத்தின் விலையைத் தவிர ஒரு பைசாவுக்கு மோதிரங்களை சப்ளை செய்ய முன்வந்த ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டது

ADVERTISEMENT

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த பொற்கொல்லர் ராஜ் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

ஒரு பைசாவுக்கு தங்க மோதிரம் சப்ளை செய்ய முன்வந்த ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கிய டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 10) தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில், ”தங்க மோதிரத்தை செய்து மாநில முழுவதும் உள்ள 17 மையங்களுக்கு ஹால்மார்க் முத்திரைகளுக்காக அனுப்ப வேண்டும் என டெண்டர் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹால்மார்க் முத்திரை பெறுவதற்கு ஒரு நகைக்கு 45 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய சூழலில், 4,41,667 தங்க மோதிரங்களை 4,365ரூபாய்க்கு சப்ளை செய்வதாக ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் கூறியிருப்பது வணிக ரீதியாக சாத்தியமற்றது.

இதை அனுமதித்தால் அந்த நகைகள் தரமானதாக இருக்காது. மருத்துவ சேவைகள் கழகம், மருத்துவப் பொருட்கள் கொள்முதல் செய்வதில் தான் நிபுணத்துவம் பெற்றது, அந்த கழகத்துக்கு தங்கத்தை பற்றி என்ன தெரியும்” என்று வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ”மனுதாரர் திட்டத்தை எதிர்த்தும் டெண்டரை எதிர்த்தும் தான் வழக்கு தொடர முடியுமே தவிர டெண்டர் வழங்கியதை எதிர்த்து வழக்கு தொடர முடியாது.

சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஏராளமான தங்கம் இருக்கலாம். அதனால் இந்த தொகையை அவர்கள் குறிப்பிட்டிருக்கலாம். தங்கம் தரமாக இல்லாவிட்டால் டெண்டரை அதிகாரிகள் ரத்து செய்வார்கள்.

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

விரிவான உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share