மராட்டிய மன்னர் சத்ரபதி சாம்பாஜியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பாலிவுட்டில் ‘சாவா’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இந்த படம் குறித்து சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசியதுதான் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.
பிபிசி-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டியின் போது நெறியாளர் ஹரூண் ரஷீத் இந்த படம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
‘சாவா’ படத்தின் இசையைப் பற்றி நீங்கள் மிகவும் பெருமைப்படுவதாகக் கூறியுள்ளீர்கள். அது உண்மையிலேயே ஒரு நல்ல இசை. இருப்பினும் அதுவொரு பிளவுபடுத்தும் படம் என்று ஹரூண் ரஷீத் கூற, இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், ’அது பிளவுபடுத்தும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அதன் மையக்கருத்தாக வீரம் இருந்ததாகக் கருதுகிறேன். இந்த படத்தின் இயக்குநரிடம், ‘நான் ஏன் இப்படத்திற்கு இசையமைக்க வேண்டும்’ என்று கேட்டேன். இதற்கு அவர், இந்த படத்திற்கு நீங்கள் மட்டும்தான் தேவை என்று கூறினார்’ என்று பதிலளித்திருந்தார்.
பாலிவுட் சினிமா தொடர்பாக சில விஷயங்களையும் பகிர்ந்துகொண்டிருந்தார். அதாவது, பாலிவுட் திரைத்துறையில் படைப்பாற்றல் இல்லாத நபர்களின் கைகளில் அதிகாரம் உள்ளது. அவர்கள்தான் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள்” என்றும் தெரிவித்திருந்தார்.
அவரது கருத்துக்கு கங்கனா ரணாவத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர்.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால், ஏ.ஆர்.ரகுமான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில் தனது பேச்சுக்கு விளக்கமளித்து வீடியோ வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான், “இசை என்பது கலாசாரத்துடன் இணைவதற்கும், அதைக் கொண்டாடுவதற்கும், மரியாதை செலுத்துவதற்கும் நான் பயன்படுத்தி வரும் ஒரு வழி. இந்தியா என்பது எனது உத்வேகம், எனது ஆசிரியர் மற்றும் எனது வீடு.
சில நேரங்களில் ஒருவரின் நோக்கம் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் என்பதை நான் உணர்கிறேன். ஆனால் இசையின் மூலம் மேன்மைப்படுத்துவதும், கௌரவிப்பதும், சேவை செய்வதுமே எப்போதும் எனது நோக்கமாக இருந்து வருகிறது. யாருக்கும் வலியை ஏற்படுத்த வேண்டும் என்று நான் ஒருபோதும் விரும்பியதில்லை, எனது நேர்மையை அனைவரும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
மலையாள இசையமைப்பாளர் கைலாஷ் மேனன, ‘ஏ.ஆர்.ரகுமான் தனது அனுபவத்தை குறிப்பிட்டிருக்கிறார். தனக்கு ஏன் வாய்ப்புகள் குறைந்தது என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இது ஒரு கலைஞனின் அடிப்படை உரிமை. ஒருவரது அனுபவத்தோடு நாம் உடன்படலாம் அல்லது மாறுபடலாம், ஆனால் அதைச் சொல்ல அவருக்கு உரிமை இல்லை என்று சொல்ல முடியாது” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஏ.ஆர்.ரகுமானின் மகள்கள் கதீஜா மற்றும் ரஹீமா ஆகியோர் தங்களது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
இந்தசூழலில் அரசியல் கட்சியினரும் ரகுமானுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
திமுக எம்.பி.கனிமொழி
மதம், மொழி மற்றும் அடையாளங்களைக் கடந்து நிற்கும் ஒரு கலைஞனைத் திட்டமிட்டு இலக்கு வைப்பதும், இதை பார்த்து அதிகாரத்தில் உள்ளவர்கள் மௌனம் காப்பதும் வருத்தமளிக்கிறது. அவர் இந்தியாவின் கலாச்சாரத் தூதர். அவருக்குக் கிடைக்க வேண்டியது மரியாதையும் நன்றியுமே தவிர, வெறுப்பு அல்லஇந்தியாவின் இசையை உலகளாவிய மேடைகளுக்கு எடுத்துச் சென்றவர்.
இத்தகைய சகிப்பின்மைக்கு ஒரு ஜனநாயக மற்றும் பன்மைத்துவ சமூகத்தில் இடமில்லை.
IstandwithARRahman
ஜோதிமணி எம்.பி
ஏ.ஆர்.ரகுமானின் இசை எப்போதும் ஒரு பாலமாகவே இருந்து வருகிறது. அவரது பயணம் எப்போதும் கலாச்சாரங்கள், நம்பிக்கைகள் மற்றும் தலைமுறைகளுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அத்தகைய ஒரு குரல் பாகுபாடுகளைப் பற்றிப் பேசும்போது, அது சமூகத்தில் நிலவும் ஆழமான அசௌகரியத்தைப் பிரதிபலிக்கிறது. அதை வெறும் கூச்சலிட்டோ அல்லது மௌனம் காத்தோ புறந்தள்ளிவிட முடியாது.
ரகுமானை மதிப்பது என்பது திறந்த மனதுடைய, பன்மைத்துவமான மற்றும் நேர்மையான இந்தியாவைக் கௌரவிப்பதாகும்.பன்முகத்தன்மையில் நம்பிக்கையுள்ள ஒரு சமூகம், இத்தகைய நேர்மையான உரையாடல்களைக் கண்டு அஞ்சாது.
ரகுமானுக்கு ஆதரவாக நிற்பது இந்தியாவின் பன்மைத்துவத்துடன் நிற்பதற்கு சமம். அது இசையுடன் நிற்பதாகும்.
