முதலில் இருக்குமிடத்திலிருந்து ஆட்சியை ஒழுங்காக நடத்தட்டும் – கனிமொழி காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தவெக அரசு இருக்கின்ற சட்டமன்றத்தில் இருந்து முதலில் ஆட்சியை ஒழுங்காக நடத்தட்டும். அதன்பிறகு புதிய சட்டமன்றத்தைப் பற்றி சிந்திக்கலாம் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி இன்று (செப்டம்பர் 10) காலை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று டி.ராஜாவை சந்தித்து நலம் விசாரித்தார்.

ADVERTISEMENT

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, “ஒரு ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களை தவெக ராஜினாமா செய்ய வைத்துள்ளது. இன்று மீண்டும் ஒரு தேர்தல் வரக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளது. இவர்கள்தான் மக்களுக்கு நேர்மையான அரசியலைத் தரப்போகிறோம் என்று கூறிக்கொள்கிறார்கள். உண்மையில், இந்த இடைத்தேர்தல் என்பது முற்றிலும் அவசியமற்ற ஒரு தேர்தல்.

முன்னதாக மக்களின் மீதும், மக்களின் வரிப்பணத்தின் மீதும் கேடு விளைவிக்கும் அளவிற்கு, தேவையற்ற இந்த இடைத்தேர்தலை மக்கள் சந்திக்க வேண்டிய சூழலை தவெகதான் உருவாக்கியுள்ளனர். ஏற்கனவே ஒரு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து, இன்று மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய நிலையை உருவாக்கியிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும்” என்றார்.

ADVERTISEMENT

தலைநகர் சென்னையில் கொலை சம்பவங்கள் நடப்பது குறித்த கேள்விக்கு, “தமிழ்நாடு முழுவதும் கொலைக் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால், முதலமைச்சர் சட்டமன்றத்தில் இதற்கு பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்தால், அவர் பஞ்ச் டயலாக்குகளைப் பேசுவதும், பழைய கதைகளைச் சொல்வதும், இல்லாத பொய்களைச் சட்டமன்றத்தில் அரங்கேற்றுவதுமாகத்தான் அந்த அரசாங்கமே நடைபெற்று வருகிறது. மக்களின் தேவைகள் மற்றும் மக்களின் பாதுகாப்பு குறித்து எந்தவித அக்கறையும் இல்லாமல் இந்த அரசு இயங்கி வருகிறது” என்றார்.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்த கேள்விக்கு, “இருக்கின்ற சட்டமன்றத்தில் இருந்து முதலில் ஆட்சியை ஒழுங்காக நடத்தட்டும். அதன்பிறகு புதிய சட்டமன்றத்தைப் பற்றி அவர்கள் சிந்திக்கலாம். கண்டிப்பாக சட்டமன்றத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றால், கலைஞர் கட்டிய சட்டமன்றக் கட்டிடம் ஏற்கனவே உள்ளது. பின்னர் அது மருத்துவமனையாக மாற்றப்பட்டிருந்தாலும், அந்த இடம் சட்டமன்றத்திற்காகவே கட்டப்பட்ட இடம். எனவே, அதைக்கூட மீண்டும் பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT

எதை கேட்டாலும் நிதி இல்லை, நிதி இல்லை என்று கூறும் ஆட்சியாளர்கள், மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதற்கான அனைத்து வழிகளையும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இனிமேலாவது மக்களின் வரிப்பணத்தை வீணாக்காமல், அதை மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share