தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தலில் விஜயின் தவெக கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் மாநிலங்களவை எம்.பியும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல் தனது எக்ஸ் பதிவில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.
என் சகோதரர் மு.க.ஸ்டாலின் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.
இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.
‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும். ” என குறிப்பிட்டுள்ளார்.
