தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் சட்டசபையில் ”குறுகிய காலத்தில்” பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் நிபந்தனை விதித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் தவெக வென்றது. விஜய் 2 தொகுதிகளில் வென்றதால் தவெகவுக்கு 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக தலைவர் விஜய் நேற்று ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஆனால் ”பெரும்பான்மைக்கு 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை; ஆகையால் 118 எம்.எல்.ஏக்களின் பட்டியலை தர வேண்டும்” என விஜய்யிடம் ஆளுநர் அர்லேகர் கேட்டிருந்தார். இதனால் இன்று மே 7-ந் தேதி முதல்வராப விஜய் பதவியேற்க திட்டமிட்டிருந்தது ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே தனிப்பெரும் கட்சியான தவெகவை ஆளுநர் அர்லேகர் ஆட்சி அமைக்க அழைக்காதது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. மேலும் ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் இதனால் தவெக உச்சநீதிமன்றத்தை நாடக் கூடும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று ஆளுநர் அர்லேகரை விஜய் மீண்டும் சந்தித்தார். இந்த சந்திப்பின் போதும் தமக்கு 112 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது; தனிப்பெரும் கட்சி என்பதால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரினார் விஜய்.
இதற்கு ஆளுநர் அர்லேகர், “பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் பட்டியலை கேட்பது உங்க நல்லதுக்குதான்.. எந்த ஒரு சட்ட சிக்கலும் பின்னாளில் வந்துவிடக் கூடாது.. அதனால்தான் 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு பட்டியலை கேட்கிறேன்” என கூறியுள்ளார்.
ஆளுநரின் இந்த கருத்துக்கு, “பதவியேற்ற பின்னர் சட்டசபையில் 2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்கிறோம்” என விஜய் பதிலளித்தார்.
ஆனால் ஆளுநர் அர்லேகர், “2 வாரங்கள் அவகாசம் தர முடியாது.. விரைவாக, குறுகிய காலத்தில் சட்டசபையில் பெரும்பான்மையை நீங்க நிரூபிக்க வேண்டும்” என நிபந்தனை விதித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதனால் முதல்வராக விஜய் பதவியேற்க இருந்த சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது.
