திமுக -அதிமுக கூட்டணி? செம்மலை பதில்!

Published On:

| By Kavi

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியான பின்பு தமிழக அரசியல் பரபரப்பாகவே உள்ளது.

இந்தநிலையில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதிய எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ADVERTISEMENT

கிரின்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று அதிமுக முக்கிய புள்ளிகள் வருகைத் தந்தனர்.

அந்தவகையில் எடப்பாடியை சந்தித்துவிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களுடைய பொதுச் செயலாளர் நல்ல முடிவெடுப்பார், தீர்க்கமாக முடிவெடுப்பார். எங்களுடைய பொதுச் செயலாளரைப் பொறுத்தவரையில் தேர்ந்த அரசியல் தலைவர். அவருக்கு எதை எப்பொழுது எப்படி செய்ய வேண்டும் என்கிற அந்த அரசியல் நிலைப்பாட்டை கச்சிதமாகச் செய்வார். அவரைப் பொறுத்தவரையிலே அவர் என்ன நினைக்கிறாரோ, என்ன முடிவெடுக்கிறாரோ அதுதான் நடக்கும். அவர் எடுக்கிற முடிவு நல்லதாகவே இருக்கும்” என்றார்.

ADVERTISEMENT

புதுச்சேரியில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட என்ன காரணம் என்ற கேள்விக்கு, “சட்டமன்ற உறுப்பினர்கள் இப்பொழுது வரவழைக்கப்பட்டு எங்களுடைய கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது நடைமுறை சம்பிரதாயம். அது நடத்தப்பட்டது. இப்பொழுது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அவர்கள் ஊருக்குச் செல்லாமல் இங்கே தங்கி இருக்க வேண்டிய அவசியம், அதனால் இங்கே இருக்கிறார்கள்.  இதில் என்ன தவறு?” என்றார்.

செங்கோட்டையன் மூலம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விலைக்கு வாங்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, “அப்படி எல்லாம் எதுவுமே நடக்காது. அப்படிப்பட்ட நபர்கள் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அல்ல. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எங்களுடைய பொதுச்செயலாளருடைய பேச்சுக்குக் கட்டுப்பட்டவர்கள். அதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை. இதெல்லாம் யூகங்கள், வதந்திகள்” என கூறினார்.

ADVERTISEMENT

திமுக – அதிமுக கூட்டணி என சொல்லப்படுகிறதே, “எந்த முடிவாக இருந்தாலும் எங்களுடைய பொதுச் செயலாளர் நல்ல முடிவை எடுப்பார், தீர்க்கமாக முடிவெடுப்பார். அவர் எடுக்கிற முடிவுதான் கடைசியில் நிற்கும். அவர் எடுக்கிற முடிவு நல்லதாகவே இருக்கும்” என பதிலளித்தார்.

இபிஎஸ் ‘கிங் மேக்கராக’ இருப்பாரா? என்ற கேள்விக்கு,  “கிங் மேக்கர் இல்ல, அவரேதான் கிங். எங்களது பொதுச் செயலாளர் தான் கிங்” என கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share