சிறப்புக் கட்டுரை: நவீன சென்னையை வடிவமைத்த கலைஞர்!

Published On:

| By srinivasan

தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சென்னையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் கலைஞர் என நிச்சயமாக சொல்லலாம்..  

‘இது நம்ம சென்னை’ என கொண்டாடுபவர்களும் உண்டு. ‘இதெல்லாம் ஊரா’ என விமர்சிப்பவர்களும் உண்டு. சென்னை, தெரியாதவர்களுக்குப் புரியாத புதிர். புரிந்தவர்களுக்கோ சொர்க்கம்..

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் வாழ்வாதாரம் தேடி வருவோரை இனம் – மொழி – மதம் – சாதி பேதம் எதுவும் பார்க்காமல் அரவணைக்கும் தாய்மடி சென்னை..

‘சென்னை’ மாநகரம்  ‘மெட்ராஸ்’ என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் அதனை அதிகாரபூர்வமாக ‘சென்னை’ என பெயர் மாற்றம் செய்தார் கலைஞர்..

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை இந்தியாவில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மிகச் சில நகரங்களில் ஒன்று. தற்போதைய நிலவரப்படி சென்னை நகரில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 28000 பேர் வரை வசிக்கின்றனர் என்கிறது புள்ளிவிபரங்கள்..

தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சென்னையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் கலைஞர் என நிச்சயமாக சொல்லலாம்..  

ADVERTISEMENT

1969ல் தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர்  சென்னை மாநகரத்தின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை அடுக்கடுக்காக மேம்படுத்தினார்..

அன்றைய கால கட்டத்தில் சென்னை நகரம் போக்குவரத்தில் திணறிய போது 1973-ல் சென்னையின் மையப் பகுதியில் கலைஞர் உருவாக்கிய அண்ணா மேம்பாலம் இன்றளவும் போக்குவரத்து நெரிசலை திறம்பட எதிர்கொண்டு வருகிறது.

இதனை தொடர்ந்து Chennai Inner Ring Road, Chennai Bye Pass Road,   Chennai Outer Ring Road, எம்.கே.என். சாலை மேம்பாலம்  சென்னை ஆர்.கே.மடம் சாலையில் பாலம், 1974 இல்

சென்னை அடையாற்றில் திருவிக  பாலம், சைதாப்பேட்டை மர்மலாங் பாலம் அகலப்படுத்தப்பட்டு மறைமலை அடிகளார் பாலம் என பெயர்வைப்பு, மேற்கு மாம்பலம் தியாகராய நகர் இணைப்பு துரைசாமி சாலையில் சிவலிங்கம் கீழ்மட்ட பாலம் என சென்னை மாநகரத்தின் உட்கட்டமைப்பையே பெரும் அளவில் மாற்றினார் கலைஞர்.

இதை தொடர்ந்து 1989ல் தி.மு.கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, விரிவாக்கப்பட்ட சென்னை விமான நிலையத்தின்  பன்னாட்டு முனையத்திற்கு அறிஞர் அண்ணாவின் பெயரும், உள்நாட்டு முனையத்திற்கு பெருந் தலைவர் காமராஜரின் பெயரும் சூட்டப்பட்டன.

இதனை தொடர்ந்து 1996-2001 கால கட்டத்தில் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது அடையாறு, காந்திமண்டபம், ஆழ்வார்பேட்டை, மியூசிக் அகாடமி, ராதாகிருஷ்ணன் சாலை சிட்டி சென்டர், பீட்டர்ஸ் சாலை (சரவணபவன்), பீட்டர்ஸ் சாலை (இராயப்பேட்டை மருத்துவமனை), எழும்பூர் மியூசியம் அருகில், புரசைவாக்கம் டவுட்டன், பெரம்பூர் ரயில்வே ஸ்டேசன் ஆகிய இடங்களில் 10 பெரிய மேம்பாலங்கள் (இதில் பெரம்பூர் மேம்பாலம் அடுத்தமுறை வந்த கழக ஆட்சியில் கட்டப்பட்டது) முடிக்கப்பட்டு கலைஞரால் திறந்து வைக்கப்பட்டன.

மீனம்பாக்கம் சாலை மேம்பாலம், கத்திபாரா பெரிய பாலம்,  கோயம்பேடு மேம்பாலம், பாடியில் உள்ள மேம்பாலம் , புழல் மேம்பாலம், பூவிருந்தவல்லி மேம்பாலம் என உலகத் தரத்திலான மேம்பாலங்களையும் கொண்டு வந்தார் கலைஞர்.

மாநகரத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட அண்ணா நகர்,  என்பது தலைவர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வைக்கான எடுத்துக்காட்டு.

சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைச்  சமாளிக்க  மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வந்த கலைஞர் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக “சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட்” என்கிற சிறப்புவகை பொதுத்துறை நிறுவனத்தையும் உருவாக்கினார் கலைஞர் கருணாநிதி..

தமிழை மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியங்களையும், தமிழ் ஆளுமைகளையும் கொண்டாடிய கலைஞர் வள்ளுவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் வள்ளுவர் கோட்டம், தமிழுக்கு செம்மொழி பூங்கா, ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாய் அண்ணா நூலகம், சென்னை அடையாறு பகுதியில் “தொல்காப்பியப் பூங்கா” சென்னையின் பல்வேறு தெருக்களிலும் தலைவர்களின் சிலைகள், பல்வேறு வீதிகளுக்கும் தமிழறிஞர்களின் பெயர்கள் என தமிழால் சென்னையை அலங்கரித்தார் கலைஞர்.

சென்னையின் பூர்வகுடி மக்கள் குடிசைகளில் வாழ்ந்த நிலையை மாற்ற இந்தியாவிலேயே முதன்முறையாக குடிசை மாற்று வாரியம், சென்னையின் குடிநீர்த் தேவையை எதிர்கொள்ளக் கூடிய வகையில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், புதிய தலைமை செயலகம், சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் பெயரில் சட்ட பல்கலைக்கழகம், சர்வதேச அளவிலான மருத்துவ கட்டமைப்புகள், ஆசியாவிலேயே மிகப்பெரிய கோயம்பேடு மார்க்கெட் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையத்தை கோயம்பேட்டில் உருவாக்கி சென்னையின் வளர்ச்சிக்கு பெரும் வித்திட்டார் கலைஞர்.

ஒருபுறம்  உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திய கலைஞர், மறுபுறம் சர்வதேச அளவிலான ஐடி நிறுவனங்கள் தமிழகத்தில் அமையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் பல்வேறு துறைகளில் கோலோச்சுகின்றனர் என்றால் அதற்கான அடித்தளத்தை இட்டவர் கலைஞர் என நிச்சயமாக சொல்லலாம்..

இந்தியாவிற்கே முன்னோடியாக  1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்ப கொள்கையை  வெளியிட்ட கலைஞர். 2000 வது ஆண்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய டைடல் பூங்காவை சென்னை தரமணியில் 12 லட்சம் சதுரடியில் ரூபாய் 340 கோடி மதிப்பீட்டில் அமைத்தார்.

மேலும்  சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் 377 ஏக்கர் பரப்பளவில்  தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கியதன் மூலம் டாடா கன்சல்டன்சி சர்வீஸ், விப்ரோ, இன்போசிஸ், போலாரிஸ், காக்னிசன்ட் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை அமைத்தன..

571 ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீபெரும்புதூரில் சிப்காட் தொழிற்பேட்டை, 347 ஏக்கர் பரப்பளவில் ஒரகடத்தில் ஹைடெக் தொழிற்பேட்டை, 40 ஏக்கரில் மறைமலை நகரில் சிப்காட் தொழிற்பேட்டை, 154 ஏக்கரில் இருங்காட்டுக் கோட்டையில் சிட்கோ தொழிற்பேட்டை, 2020 ஏக்கரில் திருமுடிவாக்கத்தில் சிட்கோ தொழிற்பேட்டை என சென்னையை அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு உந்தி தள்ளினார் கலைஞர்..

அவர் இட்ட அடித்தளத்தில் விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது சென்னை மாநகரம்..

இந்திய தேசியம்’ எனும் கட்டமைப்புக்குள்ளே ஒரு மாநில முதல்வராய் வெறும் 19 ஆண்டுகளில்  கலைஞர் செய்த திட்டங்களே சென்னையை இந்திய அளவில் முக்கியமான நகரமாக மாற்றியிருக்கிறது.

கலைஞரின் இத்தனை திட்டங்களுக்கு பின்னாலும் இருந்தது இரண்டு தான், ஒன்று பெரியாரின் சமூகநீதி பார்வை மற்றொன்று அண்ணா கண்ட லட்சிய தமிழ்நாடு. அதனை தன் திட்டங்களால் பெருமளவில் செயல்படுத்தியிருக்கிறார் கலைஞர்.

சென்னையில் சாலை, மேம்பாலங்களை உருவாக்கிய கலைஞர் கூவம் ஆற்றைச் சுத்தப்படுத்தி, தேம்ஸ் நதி போல அதில் பொதுமக்கள் படகு சவாரி செய்ய வேண்டும் என பெருமளவில் விரும்பினார். பல்வேறு காரணங்களால் இன்றுவரை நிறைவேறாமல் இருக்கும்  கூவம் ஆற்றைச் சுத்தப்படுத்தி தேம்ஸ் நதி போல மாற்றி அமைக்க வேண்டும்.

இந்த காலகட்டத்துக்கு மிக அவசியமானதும் கூட..

தமிழ்நாடு அரசு கலைஞரின் திட்டங்களை மேலும் கூர்மையாக்கி விரைவுபடுத்த வேண்டும். அதைத் தான் வரலாறு கோரி நிற்கிறது. அதில்தான் கலைஞரின் பெருமையும் உயிர்ப்பும் தங்கி நிற்கிறது.

  • க.சீனிவாசன்

செஸ் தீமில் கலைஞர் நினைவிடம்!

Photo of author
srinivasan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share