சீமான் வீட்டு பாதுகாவலர் மற்றும் டிரைவருக்கு நீதிமன்றக் காவல்!

Published On:

| By christopher

judicial custody for amalraj and subakar

நடிகை அளித்த புகாரில் சீமான் வீட்டில் ஒட்டிய சம்மனை கிழித்து காவலர்களை தடுத்த விவகாரத்தில் சீமான் வீட்டு காவலாளி மற்றும் உதவியாளருக்கு வரும் 13 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் அளிக்கப்பட்டுள்ளது. judicial custody for amalraj and subakar

நடிகை விஜயலட்​சுமி அளித்த புகாரின்​பேரில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் மீது சென்னை வளசர​வாக்கம் போலீ​ஸார் பாலியல் துன்​புறுத்தல் உள்ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்​தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் சீமான் மனு தாக்கல் செய்​தார். ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்து, 12 வாரத்​துக்​குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்​யு​மாறு உத்தர​விட்​டு, சீமான் மனுவையும் தள்ளுபடி செய்தார் நீதிபதி.

இதுதொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க கிருஷ்ணகிரி சென்றதால் நேற்று ஆஜராக​வில்லை.

இதனையடுத்து நீலாங்​கரை​யில் உள்ள சீமான் வீட்​டின் கதவில் நேற்று மீண்​டும் சம்மன் ஒட்டப்​பட்​டது. அதில், பிப்ரவரி 28-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு ஆஜராகத் தவறினால், கைது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

ஆனால் சம்மன் ஒட்டப்பட்ட சில நிமிடங்களில் போலீசார் கண்முன்னே சம்மன் கிழிக்கப்பட்டது. உயரதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு இதுதொடர்பாக விசாரிக்க நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன்​ராஜேஷ் மற்றும் போலீ​ஸார் சீமான் வீட்டுக்குள் சென்றனர்.

ஆனால் அங்கே சீமான் வீட்டு பாது​காவலராகப் பணியாற்றி வரும் ஓய்வு​பெற்ற ராணுவ வீரர் அமல்​ராஜ், போலீ​ஸாரை வீட்​டின் உள்ளே ​விடாமல் தடுத்து நிறுத்​தினார். அப்போது, இரு தரப்​பினரிடையே தள்ளு​முள்ளு ஏற்பட்டது.

police attacked by seeman security

இதனையடுத்து மோதலில் ஈடுபட்ட அமல்ராஜை கைது செய்த போலீசார், நீண்ட போராட்​டத்திற்கு பிறகு அவரிட​மிருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்​தனர். மேலும், சம்மனை கிழித்​ததாக சீமான் வீட்டு டிரைவர் சுபாகரையும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

அவர்கள் இருவரையும் நீலாங்கரை காவல் நிலையத்தில் வைத்து சுமார் 5 மணி நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கைது செய்​யப்​பட்ட அமல்​ராஜ் மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், ஆயுதச் சட்டம், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவு​களிலும், ஓட்டுநர் சுபாகர் மீது 3 பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது.

மேலும், பாதுகாவலர் மற்றும் சீமான் உதவி​யாளர் தாக்​கியதாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேரும், ராயப்​பேட்டை அரசு மருத்​து​வமனை​யில் சிகிச்சைக்காக அனுமதிக்​கப்​பட்​டனர்.

தொடர்ந்து நேற்று சோழிங்கநல்லூர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு அமல்ராஜ், சுபாகர் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவரையும் மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விஜயலட்சுமி வழக்கில் சீமான் இன்று ஆஜராகவில்லையென்றால், அவர் கைது செய்யப்படுவார் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று தனது வீட்டில் நடந்த சம்பவத்தையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் ‘நாளைக்கு நான் ஆஜராக போவதில்லை” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share