முதல்வர் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படத்திற்கு ஒரு வழியாக தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது.
முதல்வர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக கடைசியாக நடித்த படம் ஜனநாயகன். ஹெச்.வினோத் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான இத்திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினையில் சிக்கியது.
இதனால் 2026 பொங்கலுக்கு வெளியாக வேண்டிய திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து சட்டப்போராட்டம் நடத்தியது. பின்னர் வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டது.
இந்தசூழலில் படம் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியானது. இந்த விவகாரத்தில் 20க்கும் அதிகமானோரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை ஜனநாயகன் படத்தை இணையத்தில் 1.20 கோடி பேர் பார்த்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் நீளம், 183 நிமிடங்கள் (3 மணிநேரம் 3 நிமிடங்கள்) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தில் எந்தெந்த காட்சிகள் நீக்கப்பட்டன என்ற விவரங்கள் வெளியாகவில்லை.
தணிக்கை சான்றிதழ் கிடைத்திருக்கும் நிலையில் இந்த மாத இறுதியில் படம் வெளியாகும் என தகவல்கள் வருகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
