‘தனுஷ் ரசிகர் மன்ற கொடி சர்ச்சை’ – சுப்பிரமணிய சிவா விளக்கம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, திரைத்துறையினர் பலரின் அரசியல் வருகை குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.

சமீபத்தில் நடிகர் சூர்யா அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகப் பரவிய செய்திகளுக்கு, அவரது ரசிகர் மன்றத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷும் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் புதிய வதந்திகள் பரவத் தொடங்கின.

ADVERTISEMENT

சமீபத்தில் நடைபெற்ற தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில், நடிகர் தனுஷின் புகைப்படம் மற்றும் “எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல்தான் வாழ்க்கை” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கொடி ஒன்று பயன்படுத்தப்பட்டது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தனுஷ் தனது அரசியல் வருகைக்கான முன்னோட்டமாகவே இந்தத் தனிக்கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார் என்று செய்திகள் பரவின.

ரசிகர் மன்றத் தலைவர் சுப்பிரமணிய சிவா விளக்கம்

இந்நிலையில், ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ் ரசிகர் மன்றத் தலைவரும், இயக்குநருமான சுப்பிரமணிய சிவா இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ADVERTISEMENT

விழாவில் பேசிய அவர்: “இந்தக் கொடி இப்போது புதிதாக உருவாக்கப்பட்டது அல்ல. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனுஷ் ரசிகர் மன்றத்தினர் திருமணம் உள்ளிட்ட வீட்டு விசேஷங்களிலும், திரைப்பட வெளியீட்டு விழாக்களிலும் பயன்படுத்தி வரும் அதே கொடிதான் இது.

இந்த ஆண்டு நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்த சில ரசிகர்கள், அந்தக் கொடியைத் தங்களது கார்களில் பொருத்தும் வகையில் புதிய வடிவத்தில் தயாரித்துக் கொண்டு வந்திருந்தனர். அதைச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு, தனுஷின் அரசியல் வருகைக்கான அஸ்திவாரம் என வதந்திகளைப் பரப்பிவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ரிலீசுக்குத் தயாராகும் ‘ஓம்’

இதற்கிடையில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share