திரையுலகின் பிரம்மாண்ட விருந்து: தி ஒடிஸி
‘டார்க் நைட்’, ‘இன்செப்ஷன்’, ‘ஓப்பன்ஹீமர்’ எனத் தன் ஒவ்வொரு படங்களின் மூலமும் சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘தி ஒடிஸி’ (The Odyssey) திரைப்படத்தின் லண்டன் பிரீமியர் காட்சி (London Premiere) அண்மையில் நடைபெற்று முடிந்தது. ஹோமரின் (Homer) புகழ்பெற்ற கிரேக்க காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, சுமார் 250 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தைப் பார்த்த சர்வதேச திரைப்பட விமர்சகர்கள், இதனை “திரைப்பட உருவாக்கத்தின் உச்சகட்ட விருந்து” (Filmmaking feast) என்றும் “குறைபாடற்ற அற்புதம்” (Flawless and breathtaking) என்றும் ஏகமனதாகப் பாராட்டி வருகின்றனர்.
முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராவில் உருவான முதல் படம்
ஹாலிவுட் வரலாற்றிலேயே முழுக்க முழுக்க ஐமேக்ஸ் (IMAX) பிலிம் கேமராக்களை மட்டுமே பயன்படுத்தி படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற வரலாற்றுச் சாதனையை ‘தி ஒடிஸி’ படைத்துள்ளது. இதற்காகவே பிரத்யேகமாக இலகுரக, சத்தமில்லாத ஐமேக்ஸ் கேமராக்களை நோலன் பயன்படுத்தியுள்ளார். படத்தைப் பார்த்த விமர்சகர்கள், நோலனின் முந்தைய படங்களைக் காட்டிலும் இதன் காட்சி அமைப்புகளும், கிராபிக்ஸ் பயன்படுத்தாமல் நிஜமாகவே கடலில் கப்பல்களைக் கொண்டு படமாக்கப்பட்ட ஆக்சன் காட்சிகளும் (Practical effects) திரையரங்குகளில் ரசிகர்களை அப்படியே உறைந்துபோகச் செய்யும் வகையில் பிரம்மாண்டமாக வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மிரட்டிய மேட் டாமன் – அப்ளாஸ் வாங்கிய ராபர்ட் பாட்டின்சன்
ட்ரோஜன் போருக்குப் பிறகு 10 ஆண்டுகள் தன் சொந்த நாட்டிற்குத் திரும்பப் போராடும் கிரேக்க மன்னன் ஒடிஸியஸாக மேட் டாமன் (Matt Damon) வாழ்ந்துள்ளார் என்றும், இது அவரது திரைப்பயணத்திலேயே மிகச் சிறந்த நடிப்பு என்றும் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல், படத்தில் வில்லனாக (Antinous) வரும் ராபர்ட் பாட்டின்சன் (Robert Pattinson) காட்சிகளைத் தன் வசப்படுத்தி மிரட்டியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும், அன் ஹாத்வே, டாம் ஹாலந்து, ஜெண்டாயா, சார்லிஸ் தெரோன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்த காவியத் திரைப்படத்தில் தங்களின் முத்திரையைப் பதித்துள்ளனர்.
நோலன் பாணியில் ஹாரர் மற்றும் எமோஷன்
வழக்கமான நோலன் படங்களில் அறிவியல் புதிர்கள் அதிகம் இருக்கும், ஆனால் ‘தி ஒடிஸி’ திரைப்படத்தில் அவர் கிரேக்க புராணங்களின் அமானுஷ்ய மற்றும் திகில் (Horror Elements) கூறுகளைத் தன் பாணியில் மிக நேர்த்தியாகக் கையாண்டுள்ளார் என விமர்சகர் எரிக் டேவிஸ் தெரிவித்துள்ளார். படத்தின் கடைசி 20 நிமிடக் காட்சிகள் பார்ப்பவர்களைக் கண் இமைக்க விடாமல் திகைக்க வைக்கும் எனப் பல முன்னணி இதழ்கள் எழுதியுள்ளன. உலகளாவிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, இத்திரைப்படக் குழு ஜூலை 11 அன்று மும்பையில் நடைபெறும் இந்தியப் பிரீமியர் காட்சிக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. படம் ஜூலை 17 அன்று உலகளவில் தியேட்டர்களில் வெளியாகிறது.
