கோலிவுட்டை உலுக்கும் முத்துவேல் பாண்டியனின் வருகை
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைத்த ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ (Jailer 2) விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், படத்தின் இசை வெளியீட்டு விழா (Audio Launch) குறித்த மாஸான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மலேசியாவில் பிரம்மாண்ட Jailer 2 ஆடியோ லாஞ்ச்?
‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை இந்தியாவில் நடத்தாமல், மலேசியாவில் உள்ள ஒரு பிரம்மாண்ட ஸ்டேடியத்தில் சர்வதேச அளவில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாகத் தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மலேசியாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இருக்கும் கட்டுக்கடங்காத ரசிகர் பட்டாளத்தைக் குறிவைத்தும், படத்தின் உலகளாவிய விளம்பர உத்தியாகவும் (Global Promotions) இந்த வெளிநாட்டுத் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றதும் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
வைரலாகும் டத்தோ மாலிக் புகைப்படம்
இந்த யூகங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, மலேசியாவின் பிரபல திரைப்பட விநியோகஸ்தரான டத்தோ மாலிக், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகின. ‘ஜனநாயகன்’ படத்தின் மலேசிய ஆடியோ லாஞ்சை ஒருங்கிணைத்த டத்தோ மாலிக், ‘ஜெயிலர் 2’ விழாவையும் முன்னின்று நடத்தவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. எனினும், ரஜினிகாந்தின் இறுதி ஒப்புதல் மற்றும் இதர லாஜிஸ்டிக்ஸ் ஏற்பாடுகளைப் பொறுத்தே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
மெகா கூட்டணியுடன் தயாராகும் 2-வது பாகம்
ஏற்கனவே இப்படத்திலிருந்து அனிருத் இசையமைப்பில் ‘ஒன் நேம்’ (One Name) என்ற தீம் டிராக் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் பாகத்தைப் போலவே இதிலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, யோகி பாபு, சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோரும் இணைந்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மலேசிய ஆடியோ லாஞ்ச் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் சன் பிக்சர்ஸ் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
