டிஜிட்டல் திண்ணை: தம்பிக்கு வைத்த பொறி! டார்கெட் செந்தில் பாலாஜி… ஐடி போட்ட டபுள் ஸ்கெட்ச்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐடி துறை நடத்திவரும் ரெய்டுகள் தொடர்பான வீடியோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் இன்று (மே 26) காலை முதல் நடைபெற்றுவரும் வருமான வரித்துறை ரெய்டு தமிழ்நாடு அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி கரூர் அசோக், கோவையில் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர் செந்தில் கார்த்திகேயன் ஆகியோரை மையமாக வைத்துதான் இந்த ரெய்டு நடந்துகொண்டிருக்கிறது.

கரூரில் ரெய்டுக்கு சென்றபோது திமுகவினர் வருமான வரித்துறையினருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டது மட்டுமல்ல, வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடிகளை உடைத்திருக்கிறார்கள்.

வருமான வரித்துறை பெண் அதிகாரியை பேக்கை திறந்து காட்டுமாறும், ஐடி கார்டை காட்டுமாறும் ஒருமையில் பேசியிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் ரெய்டு நடத்த வந்த தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கரூர் எஸ்பி அலுவலகத்தில் முறையிட்டிருக்கிறார்கள் ஐடி அதிகாரிகள். அதன் பின் கரூர் எஸ்பி ரெய்டு நடக்கும் இடங்களுக்கு பாதுகாப்பு அளித்திருக்கிறார்.

it raid in senthil balaji related places

செந்தில்பாலாஜியை குறிவைத்து நடத்தப்பட்டுள்ள இந்த ரெய்டு என்பது இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் ஐடி வட்டாரத்தில்.

நம்பர் 1… செந்தில் பாலாஜி யார் யாருக்கு நம்பிக்கையானவர்…? நம்பர் 2 செந்தில் பாலாஜிக்கு நம்பிக்கையானவர்கள் யார் யார் என்பதுதான் இந்த ஸ்கெட்சுக்கு அடிப்படை.

அமைச்சர் செந்தில்பாலாஜி பற்றி வருமான வரித்துறை முழுமையான தகவல்களைத் திரட்டிக் கொண்டுதான் வேட்டையில் இறங்கியிருக்கிறது. அமைச்சர் செந்தில்பாலாஜிதான் இப்போது திமுகவின் முக்கியமான கட்சி நிதி ஆதாரமாக இருக்கிறார்.

அவர் மீது கை வைத்தால் திமுகவின் நிதிவாசல் அடைக்கப்படும் என்று சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்தபோது பர்சனலாக செந்தில்பாலாஜி பெயரை குறிப்பிட்டே கோரிக்கை வைத்தார்.

it raid in senthil balaji related places

முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் ஆகியோருடன் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் ஒன்றாக அமர்ந்து டின்னர் சாப்பிடும் அளவுக்கு செந்தில்பாலாஜி முதலமைச்சரின் குடும்பத்துக்கு நெருக்கமானவராக இருக்கிறார்.

மேலும் உதயநிதியின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளுக்கும் உற்ற தோழனாக இருப்பவர் செந்தில்பாலாஜி. துர்கா ஸ்டாலின் ஆன்மீகத்தில் ஈடுபாடாக இருப்பவர் என்பது பலருக்கும் தெரியும். பல கோயில்களுக்கு திருப்பணிக்கும் உதவி வருகிறார் துர்கா.

தன்னிடம் கோயில் தொடர்பான கோரிக்கைகளோடு வருகிறவர்களை செந்தில் பாலாஜியிடம் அனுப்பி வைப்பார் துர்கா. அந்த அளவுக்கு செந்தில் பாலாஜி மீது எல்லா வகையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் முதல்வரின் குடும்பத்தினர்.

வரும் எம்பி தேர்தல், அடுத்து வரும் எம்.எல்.ஏ. தேர்தல் ஆகிய இரு தேர்தல்களிலும் திமுகவை வெற்றி பெற வைப்பது எனது பொறுப்பு என்று ஸ்டாலினிடம் உறுதியளித்திருக்கும் செந்தில் பாலாஜி, அதற்கான மெக்கானிசத்தையும் ஸ்டாலினிடம் முன் வைத்திருக்கிறார்.

பூத் கமிட்டிகள் அமைத்து கட்சி கொடுக்கும் பணம் கடைசி வாக்காளர் வரை செல்வதை உறுதிப்படுத்துவதுதான் செந்தில் பாலாஜியின் ஸ்கெட்ச். இதில்தான் ஸ்டாலின் செந்தில் பாலாஜியிடம் மயங்கிவிட்டார் என்கிறார்கள் திமுக மேல் மட்ட வட்டாரங்களில்.

இது ஒரு பக்கம் என்றால்…செந்தில் பாலாஜி யார் மீதெல்லாம் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று பார்த்தால் முதல் ஆள் அவரது தம்பி அசோக். அமைச்சராக பதவியேற்றதுமே முக்கிய அதிகாரிகளிடம் செந்தில் பாலாஜி, ‘எனக்கு அமைச்சகப் பணி, கட்சிப் பணி இரண்டும் இருக்கிறது. எனவே அமைச்சகம் தொடர்பான சில முக்கிய ஆலோசனைகளை தம்பி அசோக் கவனித்துக் கொள்வார். இதில் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டாராம்.

அந்த புரிதலின்படியே இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் அமைச்சரை விட மிக மிக கச்சிதமாக பல விஷயங்களை செய்யக் கூடியவர். பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட எந்த வித பேச்சுவார்த்தைகளையும் அமைச்சர் வீட்டில் நடக்காதவாறு அசோக் பார்த்துக் கொள்வார். எங்கே எப்படி நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு சுத்தமாக விஷயங்களைக் கையாள்வார் என்கிறார்கள் கரூர் திமுகவினரே.

இவர் மட்டுமல்ல சமீபத்தில் கோவை அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த செந்தில் கார்த்திகேயனும் செந்தில் பாலாஜிக்கு மிக நெருக்கமானவராக நம்பகமானவராக இருக்கிறார். கடந்த மாநகராட்சித் தேர்தல் வரை வேலுமணியோடு சேர்ந்து இருந்த செந்தில் கார்த்திகேயன் டிசம்பர் மாதம் செந்தில் பாலாஜியிடம் வந்து திமுகவில் சேர்ந்தார். கோவை திமுக மாவட்ட அலுவலகம் கூட செந்தில் கார்த்திகேயனின் ஏற்பாட்டில்தான் தயாராகி வருகிறது என்கிறார்கள்.

it raid in senthil balaji related places
தம்பியுடன் செந்தில் பாலாஜி

இவ்வாறு செந்தில் பாலாஜி போடும் ஸ்கெட்ச்சுகளை இரு முக்கிய பாகங்களாக பிரித்து அவருக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கிறது வருமான வரித்துறை. செந்தில் பாலாஜியை நேரடியாகத் தொடாமல் அவரது தம்பி அசோக், கோவை செந்தில் கார்த்திகேயன் ஆகியோரை மையமாக வைத்து ரெய்டு நடக்கிறது.

இதன் மூலம் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்குக்கு பலம் சேர்க்க முடியுமா என்றும் அதன் அடிப்படையில் திமுகவுக்கு தேர்தல் நேரத்தில் நெருக்கடி தரலாமா என்பதும்தான் மத்திய அரசின் திட்டம் என்கிறார்கள்.

ரெய்டு நடந்துகொண்டிருக்கும்போது தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டத்துக்காக வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி சிரித்துக் கொண்டே, ‘என் வீட்டில் எந்த ரெய்டும் நடக்கவில்லை. என் தம்பி வீட்டில்தான் நடக்கிறது’ என்று சொல்லிவிட்டு ஆய்வுக் கூட்டத்துக்கு சென்றிருக்கிறார்.

இந்த ரெய்டு குறித்து செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கரூர் திமுகவினர், ‘செந்தில் பாலாஜி அரசியலுக்காக நிறைய கடன் வாங்கியிருக்கிறார். அதை இன்னும் அவர் திரும்பக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். அரசியலுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் அவர் கடன் வாங்குவார்’ என்கிறார்கள்.

செந்தில் பாலாஜியை குறிவைத்து நடத்தப்பட்டு வரும் இந்த ரெய்டால் அரசியல் ஆதாயம் யாருக்கு என்பது வருமான வரித்துறையின் அடுத்தடுத்த நகர்வுகளைப் பொறுத்தே இருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த ஐடி ரெய்டு”: ஆர்.எஸ்.பாரதி

இறுதி போட்டிக்கு செல்லப்போவது யார்? குஜராத்-மும்பை பலப்பரீட்சை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share