“சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த ஐடி ரெய்டு”: ஆர்.எஸ்.பாரதி
வருமான வரித்துறை அதிகாரிகளை திமுகவினர் அடித்தார்கள் என்று திட்டமிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவதற்காகவும் திமுக அரசின் மீது களங்கம் கற்பிப்பதற்காகவும் சோதனை நடத்துகிறார்கள் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே 26) செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,
“போர்க்களத்திற்கு காலாட்படை, குதிரைப்படையை பயன்படுத்துவது போல மத்திய பாஜக அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய மூன்று படைகளை கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை பழிவாங்கலாம் என்று கனவு காண்கிறார்கள்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பானுக்கு சென்றுள்ள இந்த நேரத்தில் தமிழக அரசிற்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு பாஜக அரசு இன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடத்தியிருக்கிறார்கள். இது பாஜக அரசின் மிக கேவலமான அரசியலை காட்டுகிறது.
ரெய்டு பற்றி திமுக அரசு எந்த காலத்திலும் கவலைப்பட்டதில்லை. 1976-ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலகட்டத்திலேயே ரெய்டுகளை சந்தித்து நாங்கள் வெற்றி பெற்றவர்கள்.
கர்நாடகாவில் தோல்வியை சந்தித்து விட்டு தமிழகம் வந்த பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில்,
“பாஜக என்றால் என்ன அதன் அதிகாரம் என்ன என்பதை செந்தில் பாலாஜி இன்னும் பத்து நாள்களில் சந்திப்பார்” என்று கூறினார்.
2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு செய்தியாளர் சந்திப்பில், “அமலாக்கத்துறை இப்போது பிஸியாக உள்ளது. சிறிது நாட்களுக்கு பின்னர் செந்தில் பாலாஜிக்கு ரெய்டு விடுவார்கள்” என்று பகிரங்கமாக அறிவித்தார்.
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோவை, கரூர் மாவட்டங்களில் அதிமுக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. அந்த மாவட்டங்களுக்கான பொறுப்பை செந்தில் பாலாஜி ஏற்றுக்கொண்ட பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு 100 சதவிகிதம் வெற்றியை தேடித்தந்தார்.
அதனால் அவரை முடக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.
ஒரு ரெய்டு நடத்துவதற்கு முன்பாக உள்ளூர் போலீஸ்காரர்களை அழைத்து கொண்டு ரெய்டுக்கு போவது தான் வழக்கம்.
செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய இடங்களில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கரூர் எஸ்.பி தெரிவித்துள்ளார்.
சோதனை நடத்த வந்தவர்கள் அதிகாரிகள் தானா என்பது தெரியாததால் தற்காப்பிற்காக ஏதாவது நடந்திருக்கலாம்.
உடனடியாக திமுகவை சார்ந்தவர்கள் யாரும் அங்கே இருக்கக்கூடாது என்று செந்தில் பாலாஜியிடம் கூறினேன். அனைவரும் ரெய்டு நடக்கும் இடத்திலிருந்து கலைந்து போய்விட்டதாக அவர் கூறினார்.
ஐடி அதிகாரிகளை திமுகவினர் அடித்தார்கள் என்று திட்டமிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவதற்காகவும் இந்த அரசின் மீது களங்கம் கற்பிப்பதற்காகவும் ஐடி சோதனை நடத்துகின்றனர்.
வருமான வரித்துறை பதிவு செய்த வழக்குகளில் 0.5 சதவிகிதம் மட்டும் தான் நிரூபித்துள்ளார்கள். குஜராத் தேர்தலில் பிரச்சாரம் செய்த காரணத்திற்காக டெல்லி துணை முதல்வராக இருந்த மனிஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்தியேந்திர ஜெயின் ஆகியோரை கைது செய்தனர்.
தேர்தல் வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றாததால் அதனை திசை திருப்புவதற்காக இதுபோன்று வருமான வரித்துறை சோதனை நடத்துகிறார்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
இறுதி போட்டிக்கு செல்லப்போவது யார்? குஜராத்-மும்பை பலப்பரீட்சை!
நான் எந்த சொத்தும் வாங்கவில்லை: செந்தில் பாலாஜி