வருமான வரித்துறையினர் தன்னுடைய வீடுகளில் சோதனை நடத்தவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று(மே 26) காலை முதல் சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியானது.
மேலும் கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர்.
ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்கள் வந்த காரின் கண்ணாடி மற்றும் விளக்குகளை இரும்பு கம்பியால் குத்தி உடைத்தனர்.
இதனால் கரூரில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், பாதுகாப்பு கேட்டு ஐ.டி. அதிகாரிகள் கருர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் தொடர்பான ஆய்வுக்கூட்டத்திற்காக தலைமைசெயலகத்திற்கு இன்று வந்துள்ளார்.
அப்போது வருமான வரித்துறை சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்,
“சென்னை மற்றும் கரூரில் உள்ள எனது வீடுகளில் ஐ.டி. சோதனை நடைபெறவில்லை. எனது தம்பி மற்றும் அவருக்கு தெரிந்தவர்களின் வீடுகளில் மட்டுமே இன்று சோதனை நடைபெறுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “வழக்கமாக துணை ராணுவம் அல்லது காவல்துறையுடன் தான் வருமான வரித்துறையினர் சோதனையிட வருவார்கள்.
ஆனால் இன்று பாதுகாப்பு அதிகாரிகள் யாருமின்றி சோதனைக்கு வந்துள்ளனர். அதனால் தான் கரூரில் சில அசம்பாவித சம்பவங்கள் நேர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது டாஸ்மாக் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, வருமான வரித்துறை சோதனைக் குறித்து இன்னும் சில மணி நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்து விரிவான விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
கரூர் திமுகவினர் களேபரம்: எஸ்.பியிடம் முறையிட்ட ஐ.டி. அதிகாரிகள்
பள்ளிகள் திறப்பு எப்போது?: அன்பில் மகேஷ்