2006 க்கு பிறகு நான் எந்த சொத்தையும் வாங்கவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் மின்சார மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று (மே 26) சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த செந்தில் பாலாஜி,
“எனது நண்பர்கள் உள்ளிட்டோரது வீடுகளில் ரெய்டு நடக்கிறது. ஆனால் எனது வீட்டில் ரெய்டு நடைபெறவில்லை. அப்படியே நடைபெற்றாலும் நான் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
இந்த சோதனை என்பது புதிதாக நான் எதிர்கொள்வது அல்ல. ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலின் போது இறுதி பிரச்சாரத்துக்கு முன்பாக இதுபோன்ற சோதனைகளை எதிர்கொண்டேன்.
இறுதி பிரச்சாரத்தின் போது விசாரணைக்கு அவசியம் வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். வாக்குப்பதிவுக்கு முன்பாக வரவழைத்து சோதனை என்ற பெயரில் இறுதிக் கட்ட பிரச்சார முன்னெடுப்பைத் தடை செய்வதற்காக இப்படிச் செய்தனர்.
இதனால் பிரச்சாரம் முடியட்டும் அதற்குப் பின்னால் நீங்கள் என்ன நடவடிக்கை வேண்டுமானால் எடுங்கள்.
வீடுகளுக்கு சீல் வைத்தாலும் சரி, அல்லது வீட்டில் பெற்றோர்கள் இருக்கிறார்கள் அவர்கள் முன்னிலையில் சோதனை நடத்தி எதைக் கைப்பற்றுகிறீர்களோ அவர்களிடம் கையொப்பம் வாங்கிக் கொண்டு சோதனையை நிறைவு செய்யுங்கள் என்றேன்.
தேர்தல் முடிந்த பிறகு விளக்கங்களைத் தர தயாராக இருக்கிறேன் என்று சொன்னேன்.
இப்போது எனது வீடுகளைத் தவிர நண்பர்கள் வீடுகளில் சோதனை நடக்கிறது.
இவர்கள் எல்லாம் வருமான வரி செலுத்துபவர்கள், ஏமாற்றக்கூடியவர்கள் அல்ல. கரூரில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்திருக்கிறது.
உடனடியாக கரூருக்குத் தொடர்பு கொண்டு பேசினேன். சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினேன். அவர்கள் உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள்.
எத்தனை இடங்களில் நடைபெற்றாலும், அவர்கள் கேட்கிற ஆவணங்களைக் கொடுக்க தயாராக இருக்கிறோம். இந்த சோதனைக்கு அனைவரும் தயாராக இருக்கிறோம். இதில் மாற்று கருத்து இல்லை. சோதனை முடிந்த பிறகு நான் கருத்துச் சொல்வது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
எனது தம்பியின் இல்லத்தில் சோதனைக்குச் சென்றவர்கள் சற்று நேரம் காத்திருக்காமல், கேட்டில் ஏறி குதித்து உள்ளே சென்ற வீடியோவை எனக்கு அனுப்பினார்கள். அதுபற்றி என்ன நடந்தது என விசாரிக்க வேண்டும்.
இன்று 40 இடங்களில் சோதனை நடக்கிறது என எனக்குத் தகவல் வந்துள்ளது.
1996 முதல் பொது வாழ்வில் இருக்கிறேன். 2006 தொடங்கி இப்போது வரை ஒரு சதுர அடி நிலம் கூட வாங்கவில்லை. புதிய சொத்துகளையும் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்கவில்லை. இனியும் வாங்க மாட்டோம். இருக்கிற சொத்துகளே போதுமானது.
வரி ஏய்ப்பு செய்திருந்தால் நடவடிக்கை எடுத்துக்கொள்ளட்டும். ஏதேனும் தவறு இருக்கிறது என்று ஐடி அதிகாரிகள் சொன்னால் அதை சரி செய்துகொள்ள தயாராக இருக்கிறோம்” என்றார்.
பிரியா
சுட்டெரிக்கும் வெயிலுக்கு ப்ரேக்: 17 மாவட்டங்களில் கனமழை!
’நாடாளுமன்றத்தை திறப்பது யார்?’: உச்ச நீதிமன்ற வழக்கில் நடந்தது என்ன?
பழனி: வைகாசி விசாக திருவிழா நாளை கொடியேற்றம்!
