ஐபிஎல் போட்டிகளின் 16 வது சீசன் இறுதி கட்டத்தை எட்டி விட்டது.
இந்நிலையில், இன்று (மே26) நடைபெறும் 2வது குவாலிஃபயர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
மும்பை அணியைப் பொறுத்தவரை ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அதேபோல் குஜராத் அணி கடந்த வருடம் ஐபிஎல் சீசனில் களம் கண்டாலும் , அதிரடி ஆட்டத்தால் சாம்பியன் பட்டத்தையும் வென்றது
குஜராத் அணியை பொறுத்தவரை சிறப்பான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது. குறிப்பாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார்.
ரஷித் கான் சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலிக்கிறார். நேர்த்தியான பந்துவீச்சில் அசத்தும் அவர், அதிரடியாக விளையாடி ரன் குவிப்பிலும் ஈடுபடுவது குஜராத் அணிக்கு கூடுதல் பலம்.
பந்துவீச்சில் முகமது ஷமி, ரஷித் கான், மொகித் சர்மா ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
சொந்த மண்ணில் களம் இறங்குவது குஜராத் அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
கடந்த சீசனில் கோப்பையை வென்ற குஜராத், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.
மும்பை அணியை பொறுத்த வரையிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன், கேப்டன் ரோகித் சர்மா நல்ல தொடக்கம் அமைத்து தருவது அவசியம். மிடில் ஆர்டரில் கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா பலம் சேர்க்கின்றனர். டிம் டேவிட், நேஹல் வதேரா தங்கள் பங்களிப்பை கொடுக்கின்றனர்.
பந்துவீச்சில் ஆகாஷ் மத்வால் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார். கடந்த ஆட்டத்தில் 5 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை எடுத்து கலக்கினார். , கேமரூன் கிரீன், கிரிஸ் ஜோர்டன் ஃபார்மில் உள்ளனர்.
சுழலில் அனுபவ வீரர் பியூஷ் சாவ்லா கைகொடுக்கிறார். குஜராத் அணியை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேற மும்பை அணியும் தீவிரம் காட்டும் என்பதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கரூர் திமுகவினர் களேபரம்: எஸ்.பியிடம் முறையிட்ட ஐ.டி. அதிகாரிகள்
பள்ளிகள் திறப்பு எப்போது?: அன்பில் மகேஷ்