ககன்யான் முதற்கட்ட சோதனை கடைசி விநாடியில் நிறுத்தம்: இஸ்ரோ விளக்கம்!

Published On:

| By christopher

ககன்யான் திட்ட மாதிரி விண்கலனை விண்ணில் ஏவும் சோதனை இன்று (அக்டோபர் 21) நடைபெறாது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து  இஸ்ரோவின் நேரலையில் பேசிய அவர், “ககன்யான் திட்ட மாதிரி விண்கலனை விண்ணில் ஏவும் திட்டம் இன்று நடைபெறாது. எரிபொருள் எரியூட்டப்படுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி 5 விநாடிகளில் கவுண்ட் டவுண் நிறுத்தி வைக்கப்பட்டு சோதனை முயற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனினும் சோதனைக்கான டிவி – டி1 ராக்கெட் பாதுகாப்பாகவே உள்ளது. ககன்யான் திட்ட மாதிரி விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் ஏவுதல் குறித்த தகவல் விரைவில் வெளியாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இன்று நடந்தது என்ன?

சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல் 1 என விண்வெளி திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றி உலக அரங்கில் பாராட்டுகளை பெற்றது இஸ்ரோ.

ADVERTISEMENT

அடுத்ததாக ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இறங்கியது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ.

இத்திட்டம் வரும் 2025-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், அதற்குமுன் 3 கட்ட பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டது.

அதற்கான முதல் கட்ட பரிசோதனையாக ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து TV-D1 ராக்கெட் மூலம் ககன்யான் மாதிரி விண்கலம் இன்று காலை 8 மணிக்கு செலுத்தப்படும் என்று இஸ்ரோ ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அதன்படி அதற்கான கவுண்ட் டவுன் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கப்பட்டது.

மேலும் ககன்யான் மாதிரி விண்கலத்தின் முதல் கட்ட பரிசோதனை ஓட்டம் அரைமணி நேரம் தாமதமாக இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கும் என்று இஸ்ரோ சுமார் 7.30 மணியளவில் அறிவித்தது.

விண்கலனை ராக்கெட் மூலம் ஏவுவதற்கு தயாராக இருந்த நிலையில் கடைசி 5 விநாடிகளுக்கு முன்னதாக கவுண்ட் டவுனை இஸ்ரோ நிறுத்தி வைத்தது.

அதனைத்தொடர்ந்து தான், எரிபொருள் எரியூட்டப்படுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி 5 விநாடிகளில் கவுண்ட் டவுன் நிறுத்தி வைக்கப்பட்டு சோதனை முயற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.

ககன்யான் – டிவி-டி1 திட்ட பின்னணி!

ககன்யான் திட்டத்தின்படி, விண்கலம் மூலம் 3 வீரர்களை தரையில் இருந்து 400 கி.மீட்டர் தூரம் சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பி அவர்களை மீண்டும் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்துவரப்படுவார்கள்.

ககன்யான் திட்டத்திற்காக 3 சோதனை ஓட்டங்கள் நடத்தபடும். அதன் முதற்கட்ட சோதனையில் டிவி-டி1 எனும் ராக்கெட் மூலம் தரையில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவுக்கு கொண்டு செல்லப்படும் மனிதர்கள் மீண்டும் பாராசூட் மூலம் பூமிக்கு திரும்பி வங்க கடலில் இறக்கப்படுவார்கள்.

அவர்கள் கடலில் இறங்கிய கேப்சூலை இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினா் பத்திரமாக மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்க உள்ளார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ககன்யான் சோதனை ஓட்ட கவுண்ட் டவுன் நிறுத்தி வைப்பு!

பகவந்த் கேசரி – விமர்சனம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share