bagavanth kesari movie review

பகவந்த் கேசரி – விமர்சனம்

சினிமா

பாலகிருஷ்ணா தந்திருக்கும் ’பண்டிகை விருந்து’

திரையுலகில் காம்பினேஷன் என்ற வார்த்தை மிக முக்கியமானது. அதுவே, ஒரு படம் குறித்து ரசிகர்கள் மனதில் பெருமளவில் எதிர்பார்ப்பை உருவாக்கும். ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் நெல்சன் இணைந்தது எப்படியொரு கவன ஈர்ப்பை ஏற்படுத்தியதோ, அது போல பக்கத்து மாநிலத் திரைப்பட ரசிகர்களையும் சில ‘காம்பினேஷன்’கள் உற்றுநோக்க வைத்திருக்கின்றன.

அவற்றுள் ஒன்று, இயக்குனர் அனில் ரவிபுடியும் நடிகர் பாலகிருஷ்ணாவும் ‘பகவந்த் கேசரி’ படத்தில் இணைந்தது. அதனைக் கேள்விப்பட்டவுடன், ‘பீட்சாவுக்கு எப்படிங்க கோங்குரா சட்னி தொட்டு சாப்பிட முடியும்’ என்று கேட்டவர்கள் பலர். அதற்கெல்லாம் சேர்த்துவைத்து, ‘சரியான முறையில் உழைப்பைக் கொட்டினால் எல்லாமே சரியாகத்தான் அமையும்’ என்று பதில் தந்திருக்கிறார் அனில் ரவிபுடி.

’இவ்ளோ பில்டப் கொடுக்குற அளவுக்கு பகவந்த் கேசரியில அப்படி என்னதான் இருக்கு’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஐம்பது வயது பாலகிருஷ்ணா

வழக்கமாக, தெலுங்கு நாயகர்கள் திரையில் நரைத்த தலைமுடியுடன் தோன்ற விருப்பப்படுவதில்லை. மீறி வந்தாலும், இளமை சொட்டச் சொட்ட இன்னொரு பாத்திரத்திலும் தலைகாட்டுவதே வழக்கம். இதில் அந்த தவறை பாலகிருஷ்ணா செய்யவில்லை. இதில், அவர் ஐம்பது வயது மதிக்கத்தக்கவராக வந்திருக்கிறார்.

போலவே, தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பாலகிருஷ்ணா படங்களில் இடம்பெற்ற சில விஷயங்கள் இதில் அறவே இல்லை.

உதாரணமாக, தன் வயதில் பாதியைக் கொண்ட நடிகைகளோடு அவர் டூயட் பாட முயற்சிக்கவில்லை. பெண்களைக் கிண்டலடிக்கும், அவர்களைக் கவர்ச்சிப் பதுமைகளாகக் காட்டும் காட்சிகள், பாடல்கள் கிடையாது. மிக முக்கியமாக, ‘அகண்டா’ போன்ற பல பாலகிருஷ்ணா படங்களில் பார்த்த ‘ரத்த தாண்டவம்’ இதில் பெரியளவில் கிடையாது.

bagavanth kesari movie review

‘அதெல்லாம் இல்லேன்னா பாலகிருஷ்ணா படம் மாதிரியே இருக்காது’ என்று சில தீவிர ரசிகர்கள் சொல்லக் கூடும். அவர்களுக்காக, ‘அதுல சில விஷயங்கள் இந்த படத்துல இருக்கு, ஆனா இல்ல’ என்று ’பதில்’ தந்திருக்கிறார் இயக்குனர் அனில் ரவிபுடி. அதற்கேற்ப பாலகிருஷ்ணா ஏற்றிருக்கும் நெலகொண்ட பகவந்த் கேசரி எனும் பாத்திரத்தையும் வடிவமைத்திருக்கிறார்.

கதை பழசுதான்

மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பகவந்த் கேசரி (பாலகிருஷ்ணா) காவல் துறையில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். ஒரு வனச்சரக அதிகாரியையும் அவரது குடும்பத்தினரையும் காப்பாற்றுவதற்காக, அடிலாபாத் எனுமிடத்தில் பெருங்கூட்டத்தையே கொன்று குவிக்கிறார். அப்படிப்பட்டவரைப் பொய்யாகக் குற்றம்சாட்டி, ஒரு வழக்கில் தண்டனை பெற வைக்கிறார் தொழிலதிபர் ராகுல் சாங்க்வி (அர்ஜுன் ராம்பால்).

சில ஆண்டுகள் கழித்து, புதிதாக வரும் சிறை அதிகாரியான ஸ்ரீகாந்த் (சரத்குமார்), பகவந்த் கேசரியின் நல்ல மனதை அறிகிறார். இறக்கும் தருவாயில் உள்ள அவரது தாயைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறார். அதைத் தொடர்ந்து, அவரது தண்டனைக் காலத்தைக் குறைக்க அரசுக்குப் பரிந்துரை செய்கிறார்.

விடுதலையாகும் பகவந்த், நேராகச் சென்று ஸ்ரீகாந்தைச் சந்திக்கிறார். அப்போது, தனக்கு உதவிய காரணத்திற்காக அவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருப்பதை அறிகிறார் பகவந்த். அந்த நேரத்தில், ஸ்ரீகாந்தை மீண்டும் பணியில் சேரச் சொல்லி உத்தரவு வருகிறது. அதற்காக, அவர் தனது மேலதிகாரியைச் சந்திக்கச் செல்கிறார்.

தான் அலுவலகம் செல்வதால் யாரிடம் மகள் விஜயலட்சுமியை விட்டுச் செல்வது என்று யோசிக்கும் ஸ்ரீகாந்திடம், ‘நீங்கள் வரும்வரை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்கிறார் பகவந்த். ஆனால், வெளியே செல்லும் ஸ்ரீகாந்த் ஒரு விபத்தில் சிக்கி மரணமடைகிறார். அதையடுத்து, விஜயலட்சுமியை வளர்க்கும் பொறுப்பை ஏற்கிறார் பகவந்த். அவருக்காக, ராகுல் சாங்வியைப் பழி வாங்கும் எண்ணத்தையே துறக்கிறார்.

bagavanth kesari movie review

தனது மகளை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்பது ஸ்ரீகாந்தின் ஆசை. அதனை நிறைவேற்றுவதற்காக, விஜயலட்சுமி (ஸ்ரீலீலா) கடுமையான பயிற்சிகளைத் தாங்குபவராக மாற்ற முனைகிறார் பகவந்த். அதற்கு மாறாக, பயந்த சுபாவம் கொண்டவராக வளர்கிறார் அப்பெண். அதற்கு, சிறு வயதில் தனது தந்தையைப் பறிகொடுத்ததும் ஒரு காரணம். அந்த பயத்திலிருந்து அப்பெண்ணை வெளிக்கொணர முடியாமல் திணறுகிறார் பகவந்த்.

அதற்குத் தீர்வளிப்பது போல, இயற்கையாக ஒரு தருணம் வாய்க்கிறது.

விஜயலட்சுமி ஒரு பிரச்சனையில் சிக்குகிறார். நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபராக மாறியுள்ள ராகுல் சாங்க்வியின் ஆட்கள் அவரைக் கொலை செய்யத் துடிக்கின்றனர். அதனை பகவந்த் கேசரி முறியடித்தாரா? தான் ஆசைப்பட்டது போல, விஜயலட்சுமியைத் தைரியமிக்க பெண்ணாக வளர்த்தெடுத்தாரா? தன் வாழ்வைச் சிதைத்த ராகுல் சாங்வியை அவர் பழி வாங்கினாரா என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘பகவந்த் கேசரி’யின் மீதி.

கதையும் காட்சிகளும் பழசு என்றபோதும், அதற்குத் திரையுருவம் தந்த விதத்தில் நம்மைக் கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் அனில் ரவிபுடி.

ஆக்‌ஷன் விருந்து

இது முழுக்க முழுக்க பாலகிருஷ்ணா படம். அதனால், அவரே பெரும்பாலான பிரேம்களில் தோன்றுகிறார். ‘எங்கப்பா என்ன சொல்லியிருக்கார் தெரியுமா’ என்று ‘பஞ்ச்’ டயலாக் அடிப்பதில் தொடங்கி, ‘ப்ரோ, ஐ டோண்ட் கேர்’ என்று மீசையை முறுக்குவது வரை மனிதர் அசத்தியிருக்கிறார். அதனால், இப்படம் அவரது ரசிகர்களுக்கு ஒரு ஆக்‌ஷன் விருந்து.

அதேநேரத்தில், இதில் நாயகிகளாக வரும் காஜல் அகர்வாலுக்கும் ஸ்ரீலீலாவுக்கும் முக்கியத்துவம் தரும் காட்சிகளும் உண்டு. குறிப்பாக, கிளைமேக்ஸில் ஸ்ரீலீலா சண்டையிடும் காட்சிகள் ‘க்ளிஷே’ என்றபோதும் பார்வையாளர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அதற்குத் தகுந்தவாறு, ஸ்ரீலீலா அக்காட்சியில் சுற்றிச் சுழன்றாடுவது அருமை.

bagavanth kesari movie review

படத்தில் சரத்குமார் சில நிமிடங்கள் மட்டுமே வந்து போயிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஆடுகளம் நரேன் என்று தமிழில் நாம் பார்த்த சில நடிகர்கள் இதிலிருக்கின்றனர். சீரியல் விரும்பிகளுக்குப் பிடித்தமான ராகுல் ரவி, இதில் ஸ்ரீலீலாவின் காதலராக நடித்துள்ளார். சுபலேக சுதாகர், பரத் ரெட்டி, ரவிஷங்கர் ஆகியோரும் கூட நமக்குத் தெரிந்த முகங்கள் தான். இவர்களனைவரையும் தாண்டி, ஸ்டைலிஸ்ட் வில்லனாக வரும் அர்ஜுன் ராம்பால் நம் கவனத்தை கவர்கிறார்.

தமன் தந்திருக்கும் பின்னணி இசையால், பாலகிருஷ்ணா நடந்து வரும் இடங்கள் எல்லாம் அதிர்வை உண்டாக்குகின்றன. அதிலும் சண்டைக்காட்சிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அதேநேரத்தில், பாடல்கள் ‘ஓகே ரகம்’ என்றளவில் அமைந்துள்ளன.

ராம்பிரசாத்தின் ஒளிப்பதிவு, ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பு, தம்மிராஜுவின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள், ஒரு கலர்ஃபுல்லான கமர்ஷியல் படத்தைத் தர உதவியிருக்கின்றன. அவற்றைச் சரியான முறையில் ஒருங்கிணைத்து, படம் பார்க்கும் ரசிகர்கள் ஆங்காங்கே சிரித்து, கண்கலங்கி, ஆக்ரோஷமாகி, முடிவில் ரிலாக்ஸ் ஆகி ‘கூலாக’ வீடு திரும்ப வகை செய்திருக்கிறார் அனில் ரவிபுடி. அதனால், இந்த பகவந்த் கேசரி ஒரு பண்டிகைக்கால விருந்தாக மாறியிருக்கிறது.

bagavanth kesari movie review

அதையெல்லாம் தாண்டி, நல்லதொரு பாலகிருஷ்ணா படம் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுபவர்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் ‘பகவந்த் கேசரி’க்கு போகலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதய் பாடகலிங்கம்

ககன்யான் சோதனை ஓட்டம் தாமதம்!

பிக் பாஸ் சீசன் 7: கேப்டனை மதிக்காத ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்!

+1
1
+1
0
+1
0
+1
7
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *