பொதுவாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் தவறாமல் செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். அதன்படி கடந்த 10ஆம் தேதியன்றும் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். is the war end between ramadoss and anbumani
ஆனால் அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில், “பாமக நிறுவனரான நானே பாமக தலைவர் பொறுப்பையும் எடுத்துக் கொள்கிறேன். தேர்தல் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில், பாமக தலைவர் அன்புமணியை செயல் தலைவராக நியமனம் செய்கிறேன்” என்று பதவியிறக்கம் செய்தார். ராமதாஸின் இந்த அதிரடி அறிவிப்பு பாமகவினரிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது.
எனினும் அடுத்த இரண்டாவது நாளில் கடந்த 12ஆம் தேதி இரவில், ‘நான் பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்’ என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டி அன்புமணி அறிக்கை வெளியிட்டார்.
குடும்பத்திற்குள் தந்தைக்கும் – மகனுக்கும் இடையேயான மோதல் நீண்டகாலமாகவே நிலவி வருகிறது.
வரும் மே 11ஆம் தேதி மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் நடைபெறும் ‘சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் சுணக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் இருவரும் அக்கறை காட்டி வருகின்றனர்.
அதனால் ராமதாஸுக்கு நெருக்கமான ஒருவர் மூலம் அவருடைய கோபத்தை தணித்து சமரசம் செய்ய அன்புமணி அனுப்பி வைத்தார். அதன்படி அவரும் ராமதாஸை சந்தித்து பேசினார்.
அதனையடுத்து நேற்று ஏப்ரல் 13ஆம் தேதி அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை பனையூருக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் அன்புமணி. அதன்படி வந்த நிர்வாகிகளுடன் மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டார்.

அதன்பின்னர் பனையூர் வீட்டிற்கு திரும்பிய அன்புமணி, அங்கு நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, “அய்யா பேசியதை பெரிய விஷயமாக யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த மாநாடு ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற கூடிய நேரத்தில் சிறு தடங்கல் ஏற்பட்டது வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் அய்யா சொல்வதை நாம் அனைவரும் கேட்டு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மாநாட்டில் எதுவும் நெகட்டிவாக நடந்து விட கூடாது. வெற்றிகரமாக நடக்க அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்” என்று தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் அன்புமணியின் அக்கா மகனும், ராமதாஸ் பேரனுமான முகுந்தனும் இருந்தது கட்சி நிர்வாகிகளிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸுடன் ஜி.கே. மணி, புதுச்சேரி கணபதி, அரியலூர் ரவி, எம்.எல்.ஏ சிவக்குமார், பாஸ்கர் போன்ற முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
அப்போது அவர்களிடம் மனம் விட்டு பேசிய ராமதாஸ், “நான் ஒரு முடிவு எடுத்தேன் என்றால் அடுத்த 2 நாளில் எதிர்முடிவு எடுக்கிறார்கள். அப்படியிருந்தால் மற்ற அரசியல் தலைவர்கள் என்னை எப்படி பார்ப்பார்கள்?
2026 சட்டமன்ற தேர்தலில் அன்புமணிக்கும், செளமியா அன்புமணிக்கும் சீட் இல்லை, அவர்கள் டெல்லியை பார்த்துக் கொள்ளட்டும். முகுந்தன் தான் சட்டமன்றத்தில் கட்சியை வழிநடத்த வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.
வரும் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் முகுந்தன் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். ஆனால் அவரை தோற்கடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அது தான் மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.
இருந்தாலும் நடைபெற உள்ள சித்திரை திருவிழா மாநாட்டில் எல்லோரும் சேர்ந்து வேலை செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில், நான் தான் தலைவர் என்று அறிவித்த பிறகும், மாவட்ட செயலாளர்கள் அன்புமணியை சந்தித்ததை அறிந்த ராமதாஸ், அதில் தனக்கு எதிராக உள்ளவர்களை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் முதல் கட்டமாக தான், பாமக பொருளாளர் திலக பாமாவுக்கு எதிராக, கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை இன்று அறிக்கை விட வைத்துள்ளார் ராமதாஸ்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
இதனால் அன்புமணியை சந்தித்தவர்கள், தோட்டத்திற்கு சென்று ராமதாஸையும், ராமதாஸை சந்தித்தவர்கள், பனையூர் சென்று அன்புமணியையும் சந்தித்து வருகின்றனர்.