”கொரோனா நெறிமுறைகளை பிரதமர் பின்பற்றினாரா?” – காங்கிரஸ் பதிலடி!

Published On:

| By christopher

கொரோனா விதிமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை நிறுத்துமாறு ராகுல்காந்திக்கு மத்திய அரசு கடிதம் எழுதியதை காங்கிரஸ் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர்.

வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த 7ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார்.

தற்போது பல்வேறு மாநிலங்களை கடந்து ஹரியானா மாநிலத்தில் நடைபயணம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சீனாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. அங்கு நாள்தோறும் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன்காராணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்களுடன் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்திக்கும், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,”நடைபயணத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் யாத்திரையை நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

is pm follow the covid restriction in election time? adhir ranjan

இதுதொடர்பாக செய்தியாளர்களை இன்று சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “நான் பாஜகவிடம் கேட்க விரும்புகிறேன். குஜராத் தேர்தலின் போது பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றினாரா?

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவை பாஜக விரும்பவில்லை. ஆனால் பொதுமக்கள் நாள்தோறும் விரும்பி இணைகிறார்கள்.

நடைபயணத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மாண்டவியா பாஜக சார்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

இதே போன்று தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், “இந்தியாவில் இன்றைய கொரோனா தடுப்பு நெறிமுறைகள் என்ன? வேறு எந்த பொதுக் கூட்டங்களிலும் கொரொனா நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லையே.” என்று கூறினார்.

அதேவேளையில் நாட்டில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்து சுகாதார மற்றும் ஆயுஷ் அமைச்சகங்கள், மருந்துகள் துறை மற்றும் பயோடெக்னாலஜி துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆகியவை இணைந்து ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

பரவும் கொரோனா : ராகுல் யாத்திரைக்கு தடை?

கொரோனா தீவிரம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share