ADVERTISEMENT

ரூ.31.8 கோடிக்கு கேமரூனின் ஒரு பகுதியை வாங்கிய நித்தியானந்தா?

Published On:

| By christopher

கேமரூனின் ஒருபகுதியை 3 மில்லியன் 500 ஆயிரம் யூரோக்களுக்கு கைலாசாவிற்கு விற்றதாக சமூக வலைதளங்களில் பரவும் போலி ஒப்பந்த ஆவணத்தை நம்ப வேண்டாம் என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் நித்தியானந்தா, பாலியல் வழக்குகளில் சிக்கி கடந்த 2018ம் ஆண்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர் இதுவரை எங்கு இருக்கிறார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

ADVERTISEMENT

எனினும் இந்துக்களுக்காக தனியாக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக நித்தியானந்தா சமூக ஊடகங்களில் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து ஆன்லைனில் ஆன்மீக வீடியோக்களை வெளியிட்டு வந்த அவர், கைலாசா நாட்டிற்கென தனிக்கொடி, நாணயம், வெளியுறவுத்துறை உள்ளிட்டவற்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

ADVERTISEMENT

ஐநாவில் சர்ச்சைப் பேச்சு

மேலும், யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசாவின் பிரதிநிதியாக கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா மாநாட்டில் விஜயபிரியா என்பவர் கலந்துகொண்டார்.

ADVERTISEMENT

அங்கு அவர், ”தங்களது குரு நித்யானந்தாவை இந்தியா துன்புறுத்தியுள்ளது.” என்ற சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.

இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ”கைலாச நாடு இந்தியாவை உயர்வாகக் கருதுகிறது.” என்று கூறி ஜகா வாங்கினார்.

இதுதொடர்பாக ஐநா மனித உரிமைகள் அலுவலகம் அப்போது வெளியிட்ட அறிக்கையில், ”யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசாவின் பிரதிநிதிகள் குழு ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் என்று கூறியே கூட்டத்தில் இணைந்தது” என்று விளக்கம் அளித்தது.

இவ்வாறு அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி தவித்து வரும் கைலாசா தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கேமரூன் நாட்டில் “கைலாசா ஐக்கிய மாநிலங்களின் இறையாண்மையை அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம்” என்ற பெயரில் ஒரு மோசடி ஆவணம் ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

3,500,000 யூரோக்களுக்கு விற்பனை

அதில், கேமரூனின் ஒரு பகுதியை 3,500,000 யூரோக்களுக்கு கைலாசாவிற்கு விற்கப்பட்டுள்ளது என்றும், இருநாடுகளும் அதிகாரப்பூர்வமாக இந்த ஒப்பந்தத்தில் உடன்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 31.8 கோடிக்கு கைலாசாவிற்கு ஒரு பகுதியை விற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்த ஆவணத்தில் கேமரூன் நிதியமைச்சர் லூயிஸ் பால் மோட்டேஸ் கையெழுத்து இடம்பெற்று இருந்ததும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா சபை கூட்டத்தில் கேமரூன் அதிகாரிகளை, கைலாசாவை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்த புகைப்படங்களும் வைரலாகின.

இந்நிலையில் நிலம் விற்றதாக வரும் புகைப்படங்கள் வைரலாக பரவி வரும் நிலையில், அதனை புறக்கணிக்குமாறு கேமரூன் அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

யாரும் நம்ப வேண்டாம்

கேமரூன் நிதியமைச்சர் லூயிஸ் பால் மோட்டேஸ் கடந்த 12ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ”கேமரூன் அரசு அதிகாரிகளின் போலியான கையெழுத்தை வைத்து நாட்டின் நிலங்கள் விற்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இத்தகைய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும், பேச்சுவார்த்தை நடத்தவும் அரச தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இந்த போலி ஒப்பந்த ஆவணம் தொடர்பாக தகுதிவாய்ந்த அதிகாரிகள் மூலம் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

எனவே இந்த ஆவணத்தை கேமரூன் நாட்டு மக்கள் யாரும் நம்ப வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதுவரை குறிப்பிட்டு சொல்லும்படி குற்றவாளியான நித்தியானந்தா எங்கு இருக்கிறார், கைலாசா எங்கு இருக்கிறது என்பதில் குழப்பம் நிலவுகின்றன. இந்நிலையில் கேமரூனில் இடம் வாங்குவதற்கு கோடிக்கணக்கில் கைலாசா கொடுத்துள்ளதாக வந்துள்ள ஒப்பந்த ஆவணம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

குட்கா முறைகேடு: முன்னாள் டிஜிபி-யிடம் விசாரணை நடத்த அனுமதி!

ஒரு கனவு: ‘விமானம்’ ஃபர்ஸ்ட் லுக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share