தனியார் ஆம்னி பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தது பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏசி, படுக்கை வசதி, தனியுரிமை என வசதிகளுடன் இருப்பதால் பெரும்பாலானோர் ஆம்னி பேருந்துகளிலேயே பயணிக்க விரும்புகின்றனர்.
ஆனால் கடந்த சில வருடங்களாக கட்டண உயர்வு, விபத்து என பயணிகள் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இன்று (ஜூன் 18) காலை பிரபல ஆம்னி பேருந்தான இண்டர்சிட்டி பஸ் விபத்தில் சிக்கியது.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் என்ற இடத்தில் அதிகாலை 5.30 மணியளவில் கரூரில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து அதன் முன்னால் சென்ற லாரி மீது மோதியதில் சாலை தடுப்பு சுவரில் கவிழ்ந்தது. இதனால் பேருந்தின் ஒரு பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து, உள்ளே இருந்த ஸ்கிரீன்கள் வெளியே தொங்கின.
இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 36 பேரில் 18க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கரூர் பகுதியை சேர்ந்த செல்லமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 18 பேரை அச்சரப்பாக்கம் போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
ஆம்னி பேருந்துகள் நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக இயக்கப்படுகின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் மின்னல் வேகத்தில் பறப்பதால் விபத்து ஏற்படுவது தொடர்ந்து வருகிறது எனவே, பேருந்தை குறிப்பிட்ட வேகத்தில் இயக்க கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
