கிச்சன் கீர்த்தனா:பாசிப்பயறு சுகியன்

Published On:

| By Minnambalam

சிலர் டிவி பார்க்கும்போது, போன் பார்க்கும் நேரங்களில்  மிக்சர், சிப்ஸ், பீட்சா, பர்கர் என ஏதேனும் கொறித்தபடியே இருப்பார்கள். இன்றைய நிலையில்
அனைவரின் வயிற்றையும் நிரப்பித் தள்ளும் ‘ஸ்நாக்ஸ்’ என்று சொல்லப்படும் இந்த நொறுக்குத் தீனியால் ஏற்படும் நன்மை – தீமைகள் பற்றிய விவாதம் தொடரும் நிலையில், வீட்டிலேயே செய்யப்படும் இந்த பாரம்பரியமான பாசிப்பயறு சுகியனால் தீமை இருக்காது என்பது நிச்சயம்.

என்ன தேவை?  
பாசிப்பயறு – 200 கிராம்  
வெல்லம் – 150 கிராம்  
மைதா மாவு – 100 கிராம்  
இட்லி மாவு – 2 கரண்டி  
தேங்காய் – ஒரு மூடி (துருவியது)  
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்  
நெய் – 2 டீஸ்பூன்  
மஞ்சள்தூள் – 2 சிட்டிகை  
உப்பு – ஒரு சிட்டிகை  
எண்ணெய் – தேவையான அளவு

ADVERTISEMENT

எப்படிச் செய்வது?
பாசிப்பயறை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, நன்கு வேகவைத்து எடுத்து வைக்கவும். வெல்லத்தை நன்கு பொடித்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய்விட்டு பாசிப்பயறு, வெல்லத்தூள், தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து எல்லாம் ஒன்றுசேர்ந்து வரும்வரை நன்கு கிளறி இறக்கவும். கலவை ஆறியதும் கையில் லேசாக நெய் தடவிக்கொண்டு, உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன், உப்பு, மஞ்சள்தூள், இட்லி மாவு சேர்த்து தோசை மாவுப் பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். பிறகு உருட்டி வைத்த உருண்டையை மைதா – இட்லி மாவு கலவையில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: பொரித்தெடுக்கும்போது எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் தீயைக் குறைக்கவும். பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

ADVERTISEMENT

டீ டைம் க்ராக்கர்ஸ்

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share