உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை கப்பலை பரிசளிக்கும் இந்தியா!

Published On:

| By Kavi

India to gift Warship Corvette INS Kirpan to Vietnam

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையை ஏந்திச் செல்லும் ரோந்து கப்பலான ஐஎன்எஸ் கிர்பான் கப்பலை வியட்நாமுக்கு இந்தியா பரிசாக வழங்க உள்ளது.

இரண்டு நாட்கள் பயணமாக புதுடெல்லி வந்த வியட்நாம் பாதுகாப்புத் துறை அமைச்சர் பான் வான் கியாங், ராஜ்நாத் சிங்கை நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.

அப்போது பேசிய ராஜ்நாத் சிங், “கடந்த ஆண்டு ஜூன் மாதம் நான் வியட்நாம் வந்தபோது, இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு தளவாட ஆதரவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கூட்டு தொலைநோக்கு அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்தக் கூட்டு தொலைநோக்கு அறிக்கை, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் விரிவான வழிகாட்டி ஆவணமாக உள்ளது.

இந்த அறிக்கை நமது பாதுகாப்பு ஒத்துழைப்பின் நோக்கத்தையும் அளவையும் மேம்படுத்தி உள்ளது. இது எதிர்காலத்துக்கான பாதையை அமைக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், ஒத்துழைப்பு திருப்தி அளிப்பதாக இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சகம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கிர்பான், வியட்நாமுக்கு பரிசாக வழங்கப்படும் என ராஜ்நாத் சிங் அறிவித்தார் என்றும் தெரிவித்துள்ளது.

“பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு, கடற்பாதுகாப்பு, பன்னாட்டு ஒத்துழைப்பு ஆகிய நடைமுறையில் உள்ள ஒத்துழைப்புகளின் நிலை குறித்து இரு அமைச்சர்களும் ஆய்வு மேற்கொண்டார்கள்.

அப்போது, ஏவுகணையை ஏந்திச் செல்லும் ரோந்து கப்பலான ஐஎன்எஸ் கிர்பான், வியட்நாமுக்கு பரிசாக வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட ரோந்து கப்பலான ஐஎன்எஸ் கிர்பான், ஏவுகணையை ஏந்திச் செல்லக்கூடிய திறன் வாய்ந்தது. வியட்நாம் கடற்படையின் திறனை மேம்படுத்துவதில் ஐஎன்எஸ் கிர்பான் முக்கிய மைல்கல்லாக இருக்கும்” என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ராஜ்

”நீ நடந்தால் நடையழகு” மகனின் புகைப்படத்தை பகிர்ந்த சிவகார்த்திகேயன்

நேதாஜியை மையமாக வைத்து உருவான ’ஸ்பை’: ரிலீஸ் எப்போது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share