தொடரை வெல்லுமா இந்திய அணி..?

விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த 29ம் தேதி நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து ஆகஸ்ட் 1ம் தேதி நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்திலும், ஆகஸ்ட் 2ம் தேதி நடந்த ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால், தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா அணிகள் மோதும் 4 வது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில் நகரில் இன்று ( ஆகஸ்ட் 6 )  நடக்கிறது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது

வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பிராண்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் தலா ஒரு அரைசதம் அடித்ததன் மூலம் ஓரளவுக்கு நல்ல ஃபார்மில் உள்ளனர். அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஓபேட் மெக்காய் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பேட்டிங் பெரும் பின்னடைவாக இருக்கிறது. அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். கேப்டன் நிக்கோலஸ் பூரன், ஷிம்ரோன் ஹெட்மியர் மற்றும் ரோவ்மேன் பவல் ஆகிய மூவரும் இணைந்து 136 ரன்களை மட்டுமே எடுத்துள்ளனர்.

ஏற்கனவே தொடரில் முன்னிலையில் உள்ள இந்திய அணி தொடரை கைப்பற்ற இன்று தீவிரம் காட்டும். கடந்த போட்டியில் காயத்தால் வெளியேறிய கேப்டன் ரோகித் சர்மா, முழுவதுமாக குணமடைந்துவிட்டார். இதனால் அவர் இன்றைய போட்டியில் களமிறங்குவார்.

இந்தத் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.அணியின் பேட்டிங் வரிசையில் சூர்யகுமார் யாதவ் திறம்பட செயல்பட்டுள்ளார். 3வது ஆட்டத்தில் 44 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அணி வெற்றிக்கு உதவினார்.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை வெல்ல இந்திய அணியும், தோல்விக்கு பதிலடி கொடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணியும் காத்திருக்கின்றன. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவிற்கு அடுத்த வெற்றி !

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.