அமெரிக்கா தலைமையிலான 6G முயற்சி: 24 நாடுகளுடன் கைகோர்த்த இந்தியா

Published On:

| By Minnambalam Desk

அடுத்த தலைமுறை தொலைத்தொடர்பு தொழில்நுட்பமான 6G நெட்வொர்க் வளர்ச்சியில் இந்தியா முக்கியமான புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்படும் சர்வதேச முயற்சியில் இந்தியா இணைந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மேலும் 24 நாடுகளுடன் இணைந்து 6G தொழில்நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டை வடிவமைக்கும் பணியில் இந்தியாவும் பங்கேற்க உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அமெரிக்க வர்த்தகத் துறை வெளியிட்டுள்ளது. 

ADVERTISEMENT

ஜி20 கூட்டத்தில் நடந்த முக்கிய பேச்சுவார்த்தை

அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஹோவர்ட் லட்னிக் மற்றும் மத்திய வர்த்தகம், தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் செப்டம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடைபெற்ற ஜி20 புத்தாக்க அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியக் குழுவுக்கு ஜிதின் பிரசாதா தலைமை வகித்தார். 

செமிகண்டக்டர், ஏஐ துறைகளில் ஒத்துழைப்பு

ADVERTISEMENT

இந்த சந்திப்பில் 6G மட்டுமின்றி செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா சென்டர்கள் தொடர்பான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்தியாவில் செமிகண்டக்டர் துறையில் அமெரிக்க முதலீடுகளை அதிகரிப்பது, ஏஐ தொழில்நுட்ப கூட்டாண்மையை வலுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களையும் ஜிதின் பிரசாதா முன்வைத்தார். 

2030-க்குள் 6G இலக்கு

இந்தியாவும் ஏற்கெனவே தனது 6G வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது. பாரத் 6G கூட்டணி மூலம் தொழில்துறை நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

2030-க்குள் 6G தொழில்நுட்பத்தில் இந்தியாவை முன்னணி நாடாக உருவாக்கும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. 6G தரநிலைகள் மற்றும் சர்வதேச தொழில்நுட்ப விவாதங்களில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்திருப்பது 6G தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியாவின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share