Asia Cup: இலங்கைக்கு எதிராக அபார வெற்றி.. பைனலுக்கு முன்னேறிய ‘இந்தியா’

Published On:

| By christopher

இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, முதல் அணியாக பைனலுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் 2023 ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.

ADVERTISEMENT

மழைக்கு நடுவே, தனது முதல் ‘சூப்பர் 4’ ஆட்டத்தில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா, 2வது போட்டியில் இலங்கையை நேற்று (செப்டம்பர் 12) எதிர்கொண்டது.

கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷ்ரதுல் தாகூருக்கு பதிலாக அக்சர் பட்டேல் சேர்க்கப்பட்டார். இலங்கை அணி எந்த ஒரு மாற்றமும் இன்றி களமிறங்கியது.

ADVERTISEMENT

வெல்லலகே சுழலில் சிக்கிய இந்தியா!

ADVERTISEMENT

பேட்டிங்கில் இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் அளித்த ரோகித் சர்மா – சுப்மன் கில் ஜோடி, முதல் விக்கெட்டிற்கு 80 ரன்கள் சேர்த்து அசத்தியது.

ஆனால், அதன்பின் தாக்குதலுக்கு வந்த 20 வயதான டுனித் வெல்லலகேவின் சுழலில் சிக்கிய இந்திய அணி, அடுத்தடுத்து சுப்மன் கில், விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை பறிகொடுத்தது.

பின் களத்திற்கு வந்த கே.எல்.ராகுல் மற்றும் இஷான் கிஷன், நிதானமாக விளையாடி 4வது விக்கெட்டிற்கு 63 ரன்கள் சேர்த்தனர். ஆனால், வெல்லலகே இந்த ஜோடியின் பார்ட்னர்ஷிப்பையும் உடைத்தார்.

அதன்பின்னர் வெல்லலகேவுடன் அசலங்காவும் கூட்டு சேர்ந்து தங்களது சுழல் பந்துவீச்சுத் தாக்குதலை தொடர இந்திய அணி, 213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. வெல்லலகே 5 விக்கெட்டுகளையும், அசலங்கா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 53 ரன்களும், கே.எல்.ராகுல் 39 ரன்களும் சேர்த்தனர்.

மீண்டும் கலக்கிய குல்தீப்!

214 ரன்கள் என்ற குறைவான இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு, துவக்கத்திலேயே பந்துவீச்சில் அதிர்ச்சி அளித்தது பும்ரா – சிராஜ் ஜோடி. 25 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த இலங்கை அணி, அதன்பின் இந்திய அணியின் சுழல் தாக்குதலை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது.

இறுதியில் இலங்கை அணி 172 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக, 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.

இந்தியாவுக்கு குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், சிராஜ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இலங்கைக்காக பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் விளாசி அசத்திய வெல்லலகே, ‘ஆட்ட நாயகன்’ விருதை பெற்றார்.

சூப்பர்4 சுற்றில் அடுத்தடுத்து 2 வெற்றிகளை பதிவு செய்ததன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்ற இந்திய அணி, 2023 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும்  முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: புழுங்கலரிசி சீடை!

சென்னை உயர்நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share