பாரம்பரிய பண்டிகை என்றாலே முறுக்கு, சீடைதான் நினைவுக்கு வரும். எவ்வளவு திண்பண்டங்கள் இருந்தாலும் கண்கள் சீடையையே தேடும். இந்த விநாயகர் சதுர்த்தியின்போது என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கு இந்த புழுங்கலரிசி சீடை ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
இட்லி அரிசி – ஒரு கப்
உளுத்தம்பருப்பு – கால் கப்
தேங்காய்த்துருவல் – அரை கப்
வெண்ணெய் – 25 கிராம்
சீரகம் – கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
அரிசியை நன்றாகக் கழுவி போதுமான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியை சூடாக்கி உளுத்தம்பருப்பை சேர்த்து மிதமான சூட்டில் வாசம் வரும் வரை வறுக்கவும். பின்னர் மிக்ஸியில் பொடித்து இரண்டு முறை சலித்துக் கொள்ளவும். அரிசி நன்றாக ஊறியதும் கிரைண்டரில் சிறிது தண்ணீர்விட்டு கெட்டியாகவும் நைசாகவும் அரைத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் அரைத்த அரிசி மாவு, உளுத்தம் பருப்பு மாவு, சீரகம், தேங்காய்த்துருவல், பெருங்காயத்தூள், உப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். மிகவும் தளர்வாகப் பிசைய வேண்டாம். ஒரு துணியில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போடவும். அதிக அழுத்தம் கொடுக்காமல் லேசாக உருட்டவும். உருண்டைகள் லேசாக உலர்ந்ததும் மிதமாக காய்ந்த எண்ணெயில் சீடைகளைப் போட்டு மிதமான தீயில் வேகவிடவும். சத்தம் அடங்கி பொன்னிறமாகும் வரை பொரித் தெடுக்கவும். ஆறிய பின் காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
குறிப்பு: அரைத்த அரிசி மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் ஒரு வெள்ளைத்துணியில் போட்டு 10 நிமிடங்கள் உலர்த்தி, ஈரப்பதம் குறைந்தவுடன் மற்ற பொருள்களைச் சேர்க்கவும். எண்ணெயை அதிக அளவு சூடாக்கக்கூடாது. சீடையை உருட்டும்போது அழுத்தி உருட்ட வேண்டாம்.
சென்னை உயர்நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்!
பாடப்புத்தகத்தில் சனாதனம் : அமைச்சர்களை பிளஸ் 2-வில் சேரச் சொன்ன அண்ணாமலை