இளையராஜா தாக்குதலுக்கு பின்னால் திமுக: பாஜக நட்டா

Published On:

| By admin

மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்ட இளையராஜாவை தமிழகத்தில் இவ்வளவு கடுமையாக அவமானப் படுத்தலாமா என பாஜக அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்பேத்கர் அண்ட் மோடி என்ற தலைப்பில் ப்ளூ கிராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில் பிரதமர் மோடியின் திட்டங்களை வரிசைப்படுத்தி பாராட்டியுள்ள இளையராஜா, இப்போது அம்பேத்கரை மோடி வடிவில் காண்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதற்கு தமிழ்நாட்டிலிருந்து சமூக தளங்களில் பல்வேறு தரப்பினரும் இளையராஜாவுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் மிக மிகப் பெரும்பாலானோர் இளையராஜா இசையின் ரசிகர்களாக இருந்த போதும் இளையராஜாவின் இந்த அரசியல் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இளையராஜா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டார் என அவரது சகோதரர் கங்கை அமரனும் தெரிவித்துள்ளார்.

நேற்று இளையராஜாவுக்கு ஆதரவாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ட்விட் செய்திருந்த நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று ஏப்ரல் 18 இளையராஜாவுக்கு தனது வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி விரிவான அறிக்கை வெளியிட்டு இருக்கும் ஜேபி நட்டா அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் இளையராஜா மீது நடந்து வரும் கருத்து தாக்குதலை குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ்நாட்டில், மாநில ஆளும் கட்சியுடன் இணைந்திருக்கும் சக்திகள், ஒரு அரசியல் கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் விரும்பத்தகாத கருத்துக்களைக் கொண்டிருப்பதால், இந்தியாவின் உயரமான இசை மேஸ்ட்ரோக்களில் ஒருவரான இளையராஜாவை கொச்சைப்படுத்தி அவமானப்படுத்தி வருகிறார்கள். இது ஜனநாயகமா? ஒருவர் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் மகிழ்ச்சியுடன் இணைந்து வாழலாம். ஆனால் அவரை ஏன் அவமானப்படுத்த வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ஜே.பி. நட்டா.

ADVERTISEMENT

**வேந்தன்**

Photo of author
admin
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share