ஐஏஎஸ் அதிகாரியாக பணியைத் தொடங்கியவர். இலக்கிய உலகில் தலித் மற்றும் பெண்ணியக் குரலை ஓங்கி ஒலித்தவர். புதிய கோடாங்கி என்ற இலக்கிய பத்திரிகையின் மூலம் சாதிக்கு எதிராக வாளைச் சுழற்றியவர். தனது அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, 2008ல் முழுநேர அரசியலுக்கு வந்தார். முதலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து மாநிலச் செயலாளராகி, 2009-ல் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். பின், காங்கிரசோடு கூட்டணி சேர்ந்து, அதன்பின் தற்போது திமுக கூட்டணியில் இணைந்து 2016 தேர்தலுக்கான ஒரு சட்டமன்றத் தொகுதியையும் பெற்றுள்ளார். அவர், எங்கே பயணித்தாலும் சாதி ஒழிப்பும், சமத்துவமும் என்ற தனது இலக்கில் இருந்து தடம்புரளாத சமூக சமத்துவப் படையின் தலைவர் சிவகாமி ஐஏஎஸ். நமது மின்னம்பலம் நேர்காணலுக்காக அவரை தொடர்பு கொண்டோம்.
தமிழக அரசியலில் உங்கள் பங்களிப்பு என்ன?
எழுத்தாளர் என்ற முறையில் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், நரிக்குறவர், திருநங்கை என இந்தச் சமூகத்தில் நலிந்துகிடக்கும் மக்கள் பிரச்னைகளைத் தொடர்ந்து எழுதி, பேசிக்கொண்டு வந்திருக்கிறேன். அவர்களின் சமத்துவத்துக்கான உரையாடலை தொடர்ந்து நடத்திக்கொண்டு வருகிறேன். திருநங்கைகளுக்கு முதல்முறையாக வாய்மொழிப் பதிவுகள் மேற்கொண்டு பத்திரிகை வாயிலாக அதை வெளிக்கொண்டு வந்தேன். அதனால், பல பத்திரிகைகள் அவர்களின் வாழ்வியலை எழுதத் தொடங்கினர். அதன் பின்புதான் அவர்களுக்கு தனிவாரியம் அமைக்கப்பட்டது. இதில் எனது பங்களிப்பும் இருந்தது. நரிக்குறவர்கள், சலவைத் தொழிலாளர்கள், சவரத் தொழிலாளர்கள் உள்ளிட்ட குறும் சமூகங்களுக்கு உள்ஒதுக்கீடு வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்து, அதை பரவலாகப் பேசப்படும் பொருளாகக் கொண்டுவந்திருக்கிறேன். தீண்டாமை, சாதி ஒழிப்பு தளங்களில் போராடியுள்ளேன். பெண்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழகத்தில் போராடிய பல பெண்களில் நானும் ஒருவர்.
உங்கள் போராட்டங்களால் தலித் மக்கள் அடைந்த பலன்கள் என்ன?
அப்போது, நான் ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலாளராக இருந்தேன். திமுக ஆட்சிக்கு வருவதற்குமுன்பே, 2002ல் சட்டமன்ற தொடர் பட்ஜெட் அறிக்கையில் ‘தலித்’ என்ற சொல், அரசு ஏடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைக்கு நான் காரணமாக இருந்திருக்கிறேன்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பட்ஜெட் சரியானமுறையில் கையாளப்படவில்லை என்று அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்வகையில், அதைப் பற்றிய ஒரு கவனக்குவிப்பைக் கொண்டுவந்திருக்கிறேன். தலித்துகளுக்கான தனி நிதி ஒதுக்கீடு சரியாக, முறையாக பின்பற்றப்படவில்லை. அதை, உரியமுறையில் அவர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்று பட்ஜெட் விவாதங்களில் சொல்லப்பட்டதில் எனது பங்களிப்பும் உண்டு. இதில் கிறிஸ்துதாஸ் காந்தி போன்றவர்களுக்கும் பங்களிப்பு இருக்கிறது. 2007ல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி பட்ஜெட் என்ற பெயரில் ஒரு தனி கையேடும் எழுதி வெளியிட்டேன்.
முக்கியமாக ‘1961ல் நிலச்சீர்திருத்தம் சட்டம்’ கொண்டுவந்ததோடு முடிஞ்சு போச்சு என்று இருந்த சூழ்நிலையை மாற்றி ஏழைகளுக்கு நிலம் தரணும், அதுவும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து , நிலமற்ற விவசாயிகள் அனைவருக்கும் ரெண்டு ஏக்கர் நிலமாவது பகிர்ந்து அளிக்கப்படவேண்டும் என்று 2004ம் ஆண்டில் ‘தலித் நில உரிமை இயக்கம்’னு உருவாக்கி, போராட்டங்கள் நடத்தினேன். அதன்மூலமா, 2006ல் திமுக அரசு ‘ஏழைகளுக்கு நிலம்’னு திட்டம் கொண்டுவந்தார்கள். மற்ற அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக அதுகுறித்து பேசினார்கள். அந்தவகையில், ஏழைகளுக்கு நிலம் என்ற விஷயத்தை உயிரோட்டமா வைத்திருந்ததில் என்னுடைய பங்களிப்பும் இருக்கு.
தலித் தலைவர் என்ற அடையாளத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழ்ச் சமுதாயம் மேல்-கீழ் அடுக்குகளாக உள்ளது. இதில், சமூக ஒற்றுமைக்காக, வேறுபாடுகளை நீக்குவதற்காக பாடுபட்டு வருகிறேன். எனவே, புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவது என்பது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்காக பாடுபடுவதாகத்தான் அர்த்தம். ‘ஒரு பெண் படித்தால் அந்தக் குடும்பம் முழுவதும் பயனடைகிறது’ என்று சொல்வார்கள். அதுமாதிரி, இந்த சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட, நலிந்த மக்களுக்கு நீதி கிடைத்தால் அனைவருக்கும் நீதி கிடைத்ததற்குச் சமம். என்னை தலித்தாக அடையாளப்படுத்துவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்னைப் பொறுத்தவரை, சாதி கடந்து மானுட சமத்துவத்துக்காக, அனைத்துப் பிரிவு மக்களுக்காகவும்தான் பாடுபடுகிறேன். இது என்றென்றும் தொடரும்.
திமுக-சசப கூட்டணிக்கான காரணமென்ன?
ஏற்கனவே, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குறைந்தபட்ச திட்டங்களை திமுக கொண்டு வந்திருக்கிறார்கள். ஏழைகளுக்கு நிலம், ஆதி திராவிடர் நிதி ஒதுக்கீடு, நரிக்குறவர்கள், திருநங்கைகளுக்கான வாரியம், அமைத்துள்ளனர். பஞ்சமி நில மீட்புக்கான ஆணையம் ஜஸ்டிஸ் மருதநாயகம் தலைமையில் கொண்டுவந்தது திமுக-தான். எல்லாக் கட்சிகளிலும் நிறைகுறைகள் இருக்கும். ஆனாலும் திமுக-வில் அதன் குறைகளை நேரில் சென்று தெரிவிக்குமளவுக்கு ஜனநாயகம் இருக்கும். மக்கள் அணுகுகிறவகையில் எதையும் நேரில் சென்று தெரிவிக்கும் அளவுக்கு ஒரு அப்ரோச் அங்கே இருக்கிறது. திமுக-வின் மது ஒழிப்புக் கொள்கையை நான் வரவேற்கிறேன். அதனால் அதில் இணைந்தேன்.
ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி, வேட்பாளர் சிவகாமியாகியுள்ளீர். எப்படி உணர்கின்றீர்?
இந்தப் பிரபஞ்சத்தில் உலகம் என்பது சிறியதென்று சொல்கிறார்கள். ஆனால் நாம் பிரயாணம் செய்யும்போது அது பெரியதாக இருக்கிறது. இந்தியாவில் தமிழகம் சிறிய ஒரு மாநிலம்தான். ஆனால், ஒரு மாவட்ட ஆட்சியராக நான் பணியாற்றும்போது மாவட்டம் என்பதே ஒரு பெரிய அலகாகத் தெரிந்தது. ஏனென்றால் பணிச்சுமை அப்படி. ‘சமூக சமத்துவப் படை’ என்ற கட்சியைத் தொடங்கி வேலை செய்யும்போது ஒரு ஒன்றியம் என்பதே எனக்கு பெரிய சவாலாக இருக்கிறது. ஏனென்றால், மக்களுக்கு உள்ள பிரச்னைகள் ஏராளம். அந்த அடிப்படையில் ஒரு சட்டமன்றத் தொகுதியில குறைந்தபட்சம் அந்த மக்களுக்கு நல்லமுறையில அனைத்தும் செய்துகொடுத்து முன்னுதாரணமான ஒரு மக்கள் பிரதிநிதியாக இருக்க முயற்சிசெய்கிறேன். அதுதான் இப்போது எனது நோக்கம்.
உங்கள் கட்சியின் கொள்கை என்ன?
பெரிய கொள்கைகள் எல்லாம் நடைமுறைக்குவரும்போது தோற்று, மாறிவிடுவதைப் பார்க்கிறோம். எனவே, நான் சிறிய விஷயங்களில் இருந்து தொடங்குகிறேன். மக்களுக்கான சிறு சிறு பிரச்னைகளை தீர்த்துவைப்பது, அவர்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது, கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்காக உழைப்பது, தன்னிறைவு கொண்ட கிராமங்களை உருவாக்குவது, நலிந்த மக்களுக்கான நல்ல பொருளாதாரத் திட்டங்களை உருவாக்கி அவர்களை மேம்படுத்துவது என்று முயற்சிக்கிறோம். செய்து காட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. வெற்றிபெற்றால் ஒரு முன்னுதாரணமான சட்டமன்றப் பிரதிநிதியாக இருந்து முழு முயற்சியோடு மக்கள் பணியாற்றுவேன்.
திமுக-வுடன் சேர்ந்ததன்மூலம் உங்கள் கொள்கைகள், நோக்கங்களை சாதித்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?
நான் முன்பே சொல்லிவிட்டேன். திமுக-வில் கூட்டணி இணைந்ததற்கான காரணத்தை. மீண்டும் சொல்கிறேன். வெற்றிபெற்றால் என் தொகுதியில் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்ய எம்மால் முடியும் என நம்புகிறேன். நலிந்த மக்களுக்கான கூடுதல் தேவைகளை திமுக-விடம் கேட்டு பெற்றுத்தர முயற்சிப்பேன்.
பெரம்பலூரில் போட்டியிடப் போகிறீர்களா?
நான் இப்போதுதான் ஊரில் இருந்து வந்துள்ளேன். எந்தத் தொகுதி என்று இன்னும் சொல்லவில்லை. எந்தத் தொகுதியில் நிறுத்தினாலும் வெற்றிபெற்று நலிந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்வேன் என உறுதி கூறுகிறேன்.
சே.த.இளங்கோவன்
