கடந்த 2019 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான யஷஸ்வி ஜெய்ஸ்வால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியவர்.
அந்த ஐபிஎல் தொடரில் 163.61 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 14 போட்டிகளில் 625 ரன்கள் எடுத்து தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். மேலும், 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் எடுத்ததன் மூலம் அதிவேக ஐபிஎல் அரை சதம் என்ற சாதனையை படைத்தார்.
இதனிடையே, வரும் ஜூலை 12 ஆம் தேதி தொடங்க உள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட உள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ரகானே தலைமையில் துலீப் டிராபி தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடிய போது பேட்டிங் செய்துகொண்டிருந்த ரவி தேஜாவை, ஜெய்ஸ்வால் எல்லை மீறி ஸ்லெட்ஜிங் செய்தார்.
இதனால் கோபமடைந்த கேப்டன் ரஹானே, ஜெய்ஷ்வாலை உடனடியாக களத்தில் இருந்து வெளியேற்றினார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் நேற்று(ஜூன் 30) தி லாலன்டாப் (The Lallantop ) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில்,”கிரிக்கெட் போட்டியின் போது சற்று ஆக்ரோஷமாக இருப்பது முக்கியம். நானும் விளையாடும் பொழுது மனதளவில் ஆக்ரோஷமாக தான் இருப்பேன். ஆனால் அது வெளிப்படையாக தெரியாது.
துலீப் டிராபியின்போது ரவி தேஜாவை நான் அதிகமாக ஸ்லெட்ஜிங் செய்யவில்லை.
அதைப் பற்றி இப்போது பேசுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. என்னை பொறுத்தவரை ஸ்லெட்ஜிங் கிரிக்கெட்டில் ஒரு அங்கமாகிவிட்டது.
சாதாரணமாக தெருக்களில் ஆடப்படும் கிரிக்கெட்டில் கூட ஸ்லெட்ஜிங் இருக்கும். அனைத்து வீரர்களும் ஸ்லெட்ஜிங்கை எதிர்கொண்டிருப்பார்கள். ஆனால் யாருக்கு எதிராக எந்த வீரர் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுகிறார் என்பது முக்கியம்.
அதேபோல் யாராக இருந்தாலும் என் தாயை பற்றியோ, என் சகோதரியை பற்றியோ தவறாக பேசினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்