கொளத்தூர் மக்களோடு என்றும் இருப்பேன் : ஸ்டாலின்

Published On:

| By Kavi

கொளத்தூர் மக்களோடு என்றும் இருப்பேன் என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் தவெக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். எனினும் தனக்கு வாக்களித்த மக்களைச் சந்திப்பதற்காக இன்று கொளத்தூர் சென்றார். 

ADVERTISEMENT

திறந்தவெளி வாகனத்தில்  தொண்டர்கள் புடைசூழ கொளத்தூரில் நகர்வலம் வந்தார். 

அப்போது ஸ்டாலினை பார்த்து சில தொண்டர்கள் அழத் தொடங்கினர். அவர்களிடம் அழ வேண்டாம், அடுத்த தேர்தலில் பார்த்துகொள்ளலாம் என சைகை காட்டினார். வாகனத்தில் ஸ்டாலினுக்கு பின்னால் நின்ற முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, கண்கலங்கினார். 

ADVERTISEMENT

இந்நிலையில் கொளத்தூருக்கு சென்ற புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஸ்டாலின். 

அதில்,  “கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு.

ADVERTISEMENT

15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.

தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.

ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.

உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share