நாட்டையே உலுக்கிய ஒடிஷா ரயில் விபத்தில் 293 பேர் உயிரிழந்ததற்கு மனித தவறுகளே காரணம் என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஜூன் 2ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் சாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையம் அருகே அதிவேகத்தில் சென்றபோது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலின் பின் பகுதியில் மோதி ரயில் பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளங்களிலும், தண்டவாளத்தை ஒட்டிய பள்ளத்திலும் கவிழ்ந்தன. அந்த நேரத்தில் பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த ரயில் மீது கோரமண்டல் ரயிலில் இருந்து சிதறிய பெட்டிகள் மோதின.
இந்த கோர விபத்தில் 293 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், ரயில் பாதுகாப்பு ஆணையம் இதில் சதி ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது. அதே வேளையில், சிக்னல் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் தவறால் தான் விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி, விபத்துக்கான காரணம் குறித்த 40 பக்க அறிக்கையை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் சமர்ப்பித்துள்ளார்.
அதில், பஹானாகா பஜார் ரயில் நிலையத்திலிருந்து சிக்னல் மாற்றத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக விபத்து நடைபெற்றுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
”விபத்து நடந்த ஜூன் 2ஆம் தேதியன்று மாலை 4.20 மணியளவில் சிக்னல் துண்டிப்பு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. அப்போது பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் மாலை 4.50 மணிக்கு மீண்டும் இணைப்பு மெமோ வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிக்னல் இணைப்பிற்குப் பிறகும் ஊழியர்கள் சிக்னல் சர்க்யூட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இந்த குறைபாடுகள் ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தவறான சமிக்ஞையை ஏற்படுத்தியது. பஹானாகா ரயில் நிலையத்தில் மெயின் லைனுக்கு பச்சை சிக்னல் காட்டப்பட்டது. ஆனால் லூப் லைனுக்கு தண்டவாளம் கிராஸ் செய்யப்பட்டுள்ளது. வேகமாக வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மாற்றப்பட்ட லூப் லைனில் சென்று சரக்கு ரயிலில் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. அதன் தொடர்ச்சியாக யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் இந்தப் பாதையில் வந்தபோது பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையைத் தொடர்ந்து கூடுதல் சிக்னல் அதிகாரி ராகுல் அகர்வால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் ரயில் சிக்னல் மாற்றம் தொடர்பாக அலட்சியத்துடன் செயல்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விரைவில் அவர்களுக்கு எதிராக ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்கக் கூடும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையை முழுமையாக இதுவரை ஏற்கவில்லை என்றும், அதேநேரத்தில் ரயில் பயணிகள் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை என்றும் ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ரூ.999 விலையில் JIO போன் அறிமுகம்!
சரத் பவார் வழியில் அஜித் பவார்: மகாராஷ்டிராவின் திருப்புமுனை கதை!

