2024 தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி, ஒருங்கிணைந்து கூட்டணி அமைக்க முயற்சித்து வரும் நிலையில் தேசிய அரசியலில் முக்கிய கட்சியான தேசியவாத காங்கிரஸில் பிளவு ஏற்பட்டுள்ளது.
தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்த அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சென்று கடந்த ஜூலை 2ஆம் தேதி பாஜக கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
இந்தியாவின் அதிக பொருளாதார வளத்தை கொண்ட மும்பையை தலைநகராக கொண்ட மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து ஏற்படும் இந்த அரசியல் நகர்வு தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.
2019ல் 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 105 இடங்களில் வென்றது. சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களை பிடித்தன.
அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை இல்லாததால் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்த தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தாலும், அதிகார பிரச்சினை காரணமாக இந்த கூட்டணி முறிந்தது.
தேர்தலுக்கு பின் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கைகோர்த்து மகா விகாஸ் அகாதி என்று கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இந்த ஆட்சி இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2022ல் சிவசேனாவுடன் இருந்த ஏக்நாத் சிண்டே, இக்கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் சேர்ந்து முதல்வரானார்.
அதைதொடர்ந்து தேசியவாத காங்கிரஸில் இருந்து அஜித் பவார் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைவார்கள் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்தசூழலில் கட்சி உடைவதை தடுக்க தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த மே மாதம் சரத் பவார் அறிவித்தார். அஜித் பவார் அடுத்த தலைவர் ஆவார் என்றும் பேசப்பட்டது. ஆனால் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கட்சித் தலைவர் பதவியை மீண்டும் ஏற்றுக் கொண்டார் சரத் பவார்.
அதன்பின் கட்சியில் இருந்து அஜித் பவார் ஓரம்கட்டப்பட்டதாகவும் மகாராஷ்டிரா அரசியலில் பேசப்பட்டது. அதோடு கடந்த ஜூனில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, பிரபுல் படேல் ஆகியோர் செயல் தலைவர்களாக அறிவிக்கப்பட்டனர். இதனால் கடும் அதிருப்தியில் இருந்து வந்த அஜித் பவார் பாஜக கூட்டணி அரசில் இணைந்து துணை முதல்வராகியுள்ளார்.
ஏற்கனவே முன்னாள் முதல்வரும், பாஜக மாநில தலைவருமான தேவந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக இருக்கும் நிலையில் மற்றொரு துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்றிருக்கிறார்.
யார் இந்த அஜித் பவார்?
1959 ஆம் ஆண்டு தியோலாலியில் பிறந்த அஜித் பவார் 1982ல் அரசியலில் கால் எடுத்து வைத்தார். 1991ல் பாராமதி மக்களவை தொகுதியில் நின்று வெற்றி பெற்று எம்.பி. ஆனார் அஜித் பவார், ஆனால் தனது சித்தப்பா சரத் பவாருக்காக அந்த தொகுதியை விட்டுக்கொடுத்தார்.
காரணம், 1990ல் வி.பி.சிங் மற்றும் சந்திரசேகரின் அரசாங்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்தன. தொடர்ந்து 1991 ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.
அப்போது 1991 நரசிம்ம ராவ் பிரதமரான போது சரத் பவாரை மத்திய அரசுக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி கொடுத்து அழைத்தார். மத்திய அமைச்சராக எம்.பி. பதவி அவசியம் என்பதால் இந்த பாராமதி தொகுதியை தனது சித்தப்பாவுக்காக விட்டுக்கொடுத்தார்.
சரத் பவாரின் ஆரம்ப கால வெற்றிக்கு பெரும்பங்காற்றியவர் அவரது அண்ணனும் அஜித் பவாரின் தந்தையுமான அனந்தராவ் பவார். ஆனால் அவர் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும், மகன் அஜித் பவார் மாநில அரசியலில் தீவிரம் காட்டினார்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அஜித் பவார் 1991 முதல் 2019 வரை ஏழு முறை பாராமதி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார்.
5 முறை துணை முதல்வர்
அதுபோன்று காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவானின் பதவிக் காலத்தில் நவம்பர் 2010-செப்டம்பர் 2012 வரையிலும், அதன் பிறகு அக்டோபர் 2012 – செப்டம்பர் 2014 வரையிலும் இரண்டு முறை துணை முதல்வராக பதவி வகித்துள்ளார்.
இதையடுத்து பாஜகவின் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் இணைந்து மூன்றாவது முறையாக 2019 நவம்பர் 23-26 வரை மூன்று நாட்கள் துணை முதல்வராக இருந்தார்.
தொடர்ந்து காங்கிரஸ், சிவசேனா, என்.சி. கூட்டணியில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி அரசாங்கத்தின் கீழ் நான்காவது முறையாக டிசம்பர் 2019-ஜூன் 2022 வரை துணை முதல்வராக இருந்தார்.
தற்போது, சிவசேனாவைச் சேர்ந்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் ஐந்தாவது முறையாக துணை முதல்வராகியுள்ளார்.
சரத் பவாரும், அஜித் பவாரும்
இந்தசூழலில் 1978ல் வசந்ததாதா பாட்டீலுக்கு எதிராக சரத் பவார் செய்த அரசியல் நினைவுக்கு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எமர்ஜென்சிக்கு பிறகு காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டது.
அப்போது மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், இந்திரா காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ் (சோஷியலிஸ்ட்) என இருபிரிவாக காங்கிரஸ் போட்டியிட்டது.
இதில் சோஷியலிஸ்ட் காங்கிரஸில் இருந்து சரத் பவார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சோஷியலிஸ்ட் காங்கிரஸ் 69 இடங்களையும், இந்திரா காங்கிரஸ் 62 இடங்களையும், ஜனதா கட்சி 99 இடங்களையும் பிடித்தன.
பெரும்பான்மை இல்லாததால் இரு காங்கிரஸ் கட்சிகளும், சுயேட்சைகள் மற்றும் மாநிலத்தின் சிறிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தன. வசந்த்தாதா பாட்டில் முதல்வரானார். தொழிலாளர் துறை அமைச்சரானார் சரத் பவார்.
ஆனால் பெரும்பான்மை இல்லாதது மற்றும் ஆட்சி அமைத்த பிறகு இரு காங்கிரஸுக்கு இடையே ஏற்பட்ட மோதல் என தினசரி நெருக்கடியை சந்தித்து வந்தது இந்த ஆட்சி.
இதனால் அரசியல் தந்திரத்தை பயன்படுத்திய சரத் பவார் இந்த கூட்டணியில் இருந்து 38 எம்.எல்.ஏ.க்களுடன் விலகினார். இதனால் வசந்த்தாதா பாட்டில் ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து ஜனதா கட்சி மற்றும் மற்ற சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து தனது 38 ஆவது வயதில் முதல்வர் ஆனார்.
இதை குறிப்பிட்டு தற்போது 40 எம்.எல்.ஏ.க்களுடன் அஜித் பவார் சென்று ஏக்நாத் சிண்டே ஆட்சியில் இணைந்தது பற்றி அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். சரத் பவாரை பார்த்து அரசியலில் வளர்ந்த அஜித் பவார் தற்போது அவரது தந்திரத்தையே செய்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.
மறுபக்கம் அஜித் பவார் மீதான ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக அவர் பாஜகவில் இணைந்திருப்பதாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் லாலன் சிங் கூறியுள்ளார்.
”சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி பேசியதை கேட்டேன். அப்போது அவர் மகாராஷ்டிராவில் என்சிபி தலைவர்கள் ரூ.70,000 கோடி ஊழலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் பெரும்பாலான என்சிபி கட்சியை சேர்ந்தவர்கள் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளனர். இப்போது அவர்கள் பாஜக வாசிங் மிஷினுக்குள் சுத்தமாகிவிடுவார்கள்” என்று கூறியுள்ளார் லாலன் சிங் .
அஜித் பவார் மீதான ஊழல் குற்றச்சாட்டு
அந்த வகையில் தற்போது அஜித் பவாரின் மீதான ஊழல் குற்றச்சாட்டும் பேசுபொருளாகியுள்ளது.
1999-2014ம் ஆண்டு வரை மகாராஷ்டிராவில் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தது. இதில் 2009 வரை அஜித் பவார் நீர்வளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதில் சுமார் 70,000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மாநில ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில் இருந்து அஜித் பவார் விடுவிக்கப்பட்டார்.
ஆனாலும் அஜித் பவாருக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அஞ்சலி தமானியா, விஜய் பந்த்ரே மற்றும் நீர்ப் பாசனத் திட்ட முன்னாள் பொறியாளர் ஆகியோர் மும்பை உயர் நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதினர். இதனால் அவர் மீதான வழக்கு எப்போது வேண்டுமானாலும் மீண்டும் திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இரண்டாவதாக மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ரூ.25,000 கோடி ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அஜித் பவார் மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. அவருடைய சர்க்கரை ஆலையையும் 2021ல் அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.
முன்னதாக இந்த ஊழல் குற்றச்சாட்டை குறிப்பிட்டு அஜித் பவார் சிறைக்கு செல்வார் என்று விமர்சித்திருந்தார் பட்னாவிஸ். அந்த வகையில் பட்னாவிஸ் பேசியதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் பவார் பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து மகாராஷ்டிரா அரசு 3 இஞ்ஜின் கொண்ட அரசாக மாறியிருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே, பட்னாவிஸ், அஜித் பவார் ஆகிய மூன்று முக்கிய தலைவர்கள் பாஜக கூட்டணியில் இருக்கின்றனர். அடுத்ததாக 2024 தேர்தல், அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா தேர்தல் நடைபெற இருக்கிறது.
2024 தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என்பதே பாஜகவின் முக்கிய நோக்கம். 80 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து அதிக மக்களவை தொகுதிகள் உள்ள இரண்டாவது மாநிலம் மகாராஷ்டிரா. அங்கு 48 எம்.பி தொகுதிகள் இருக்கின்றன. இதனால் மகாராஷ்டிராவில் வெற்றி பெறுவது பாஜகவுக்கு மிக முக்கியமானது.
எனவே மகாராஷ்டிராவில் பட்னாவிஸ், ஷிண்டே, பவார் கைகோர்த்திருப்பது பலனை தருமா? இந்த திருப்புமுனை தேர்தல் வரை தொடருமா? 2024 தேர்தல் கூட்டணி எப்படி இருக்கும்? 2019 தேர்தலுக்கு பின்னர் பாஜக, என்.சி.பி கூட்டணியில் ஆட்சி அதிகாரத்துக்காக இழுபறி நீடித்து பின்னர் பாஜகவில் இருந்து என்.சி.பி விலகியது. அதுபோல் 2024 தேர்தலுக்கான கூட்டணியில் இழுபறி நீடித்தால் அஜித் பவார் என்ன செய்வார்? என கேள்விகள் இப்போதே எழத்தொடங்கிவிட்டன.
எது நடந்தாலும், ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணம்’ என்ற கதையாகத்தான் இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம் மகாராஷ்டிராவின் இருந்த யு டர்ன் அரசியலை.
பிரியா