அறையை விரைவாகக் குளிர்விக்கவும், மின் கட்டணம் குறையவும் ஏசியை எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் கோடைக்காலம் முடிந்துவிட்டாலும் கூட தற்போதும் வெயில் கொளுத்தி வருகிறது. வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தாலே ஏசி இல்லாமல் இருக்க முடியாத சூழலே உள்ளது. இனி மழைக்காலம் வரும் வரை நமக்கு ஏசியின் தேவை உள்ளது. ஆனால், தொடர்ச்சியான ஏசி பயன்பாடு என்பது மின்சாரக் கட்டணத்தை (electricity consumption) எகிறச் செய்துவிடும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஏசியை பயன்படுத்தி அறையை விரைவில் குளிர வைப்பது எப்படி என்பது குறித்த டிரிக்ஸ் பலருக்கு தெரிவதில்லை. ஏசியை பயன்படுத்தி எப்படி அறையை விரைவாக குளிர வைப்பது மற்றும் கட்டணத்தை எப்படி குறைக்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
ஏசியுடன் ஃபேனை சேர்த்து இயக்கலாம்
ஏசி இயங்கும்போது ஃபேனை இயக்க வேண்டுமா வேண்டாமா (Use AC With Fan) என்பதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. ஏசியுடன் ஃபேனை பயன்படுத்துவது மிகவும் சரியானது. சீலிங் ஃபேன் காற்றை வேகமாகச் சுழற்றுவதால் ஏசியிலிருந்து வரும் குளிர் காற்று அறையின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடைகிறது. ஏசி மட்டும் இயங்கும்போது குளிர் காற்று பெரும்பாலும் ஒரே இடத்தில் தங்கிவிடுகிறது. ஆனால், மின்விசிறி அந்தக் காற்றை அறை முழுவதும் சீராகப் பரப்புகிறது. இது அறையை விரைவாகக் குளிர்விப்பதோடு, ஏசிக்கு அதிக சிரமத்தையும் கொடுப்பதில்லை.
ஏசியை 24-26°C வைத்து பயன்படுத்துங்கள்
ஃபேன் ஓடும்போது ஏசியை 24-26°C டெம்ப்ரேச்சரில் (Set AC temperature) வைத்து பயன்படுத்தலாம். இது அறை முழுவதுக்கும் சீரான குளிர்ச்சியை வழங்குகிறது. இதனால் ஏசியை அதிக குளிர்ச்சியில் வைத்து இயக்க வேண்டிய தேவையில்லை. குறைவான டெம்ப்ரேச்சர் பயன்படுத்துவதால் மின்சார நுகர்வையும் நாம் குறைக்கலாம்.
சீலிங் ஃபேனை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும்
சீலிங் ஃபேனை மிக அதிகமான வேகத்தில் வைத்து இயக்குவது சில சமயங்களில் குளிர்ச்சி ஓட்டத்தைப் பாதிக்கக்கூடும். மிதமான வேகமே சிறந்தது. இது அறை முழுவதும் குளிர்ச்சி பரவலாக சென்று சேர உதவுகிறது. இதனால் இரவில் நிம்மதியாக உறங்க முடியும். ஏசியை ஆஃப் செய்துவிட்டால் கூட ஃபேன் போட்டு இருந்தால் தொடர்ந்து குளிர்ச்சி நீடிக்கும். இதனால் ஏசி பயன்பாட்டில் இருந்து வரும் கட்டணம் குறையும்.
அறையை மூடி வைக்க வேண்டும்
அறையின் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வைப்பது குளிர் காற்று (Cooling Tips) வெளியேற வழிவகுத்துவிடும். இதனால் அறை குளிர்ச்சியடைய நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். அத்துடன் குளிர்ந்த காற்றைத் தர ஏசி அதிகமான பணியை மேற்கொள்ள வேண்டியதாக மாறிவிடும். அறை கதவுகள், ஜன்னல்கள் மூடி இருக்கும்போது அறை விரைவில் குளிர்ந்துவிடுகிறது.
ஏசி ஃபில்டரை சுத்தமாக வைத்திருங்கள்
ஏசி பயன்படுத்துவோருக்கு இதுதான் மிக முக்கியமான அட்வைஸ். ஏசி ஃபில்டரை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நாம் ஏசியுடன் சேர்த்து ஃபேனையும் இயக்குவதால் ஏசி ஃபில்டரில் (clean AC filter) தூசி படிய அதிக வாய்ப்புகள் உள்ளன. அழுக்கான ஃபில்டர் ஏசியின் குளிரூட்டும் திறனைக் குறைக்கும். இதனால் ஏசி இயங்கினாலும் அறை குளிராக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆகவே, ஃபில்டரை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம். குறைந்தபட்சம் 10 – 15 நாட்களுக்கு ஒருமுறை ஃபில்டரை கழற்றி நன்றாக சுத்தப்படுத்தி, கழுவி மீண்டும் மாட்டுங்கள். ஏசி குளிரூட்டும் திறன் ஜெட் வேகத்தில் அதிகரிப்பதை பார்ப்பீர்கள்.
ஏசி டைமரை (Timer) பயன்படுத்தலாம்
இரவில் நாம் ஏசி குளிர்ச்சியில் அப்படியே உறங்கிவிடுவோம். விடிய விடிய ஏசி இயங்குவதால் மின் கட்டணம் அதிகரிக்கும். ஆகவே, ஏசி திரையில் தெரியும் Timer ஆப்ஷனை பயன்படுத்தி நமக்கு தேவையான நேரம் மட்டும் ஏசியை இயக்கலாம். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அறை முழுமையாக குளிர்ந்துவிடும் என்பதால் அதன்பிறகு ஏசி இல்லாமல் கூட நிம்மதியாக உறங்க முடியும்.
