நேற்று வரை உங்களுடன் மிகவும் ஆசையாகவும், மணி கணக்கிலும் பேசிக் கொண்டிருந்த ஒரு நபர், இன்று திடீரென எந்தவொரு காரணமும் சொல்லாமல் மாயமாய் மறைந்துவிட்டால் (Ghosting) எப்படி இருக்கும்? உங்களது மெசேஜ்களுக்குப் பதில் வராது, போன் கால்கள் எடுக்கப்படாது, சமூக ஊடகங்களில் உங்களைத் தடுத்து (Block) இருக்க மாட்டார்கள் ஆனால் உங்களது இருப்பையே மதிக்க மாட்டார்கள்.
நவீன டிஜிட்டல் மற்றும் காதல் உலகில் இதற்குப் பெயர் ‘கோஸ்டிங்‘ (Ghosting). அதாவது ஒரு நபர் திடீரென ‘பேய்’ போலத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு காணாமல் போவது. இந்த ஏமாற்றம் நம்மை நிலைகுலைய வைப்பதுடன், “நான் என்ன தப்பு செய்தேன்?” என்ற ஓவர் திங்கிங்கிற்குள் தள்ளிவிடும். ஒருவர் உங்களை ‘கோஸ்ட்’ செய்கிறார் என்றால் அதன் உண்மையான அர்த்தம் என்ன, அதன் பின்னணியில் இருக்கும் உளவியல் என்ன என்று இங்குப் பார்ப்போம்.
‘கோஸ்டிங்’ செய்வதன் உண்மையான அர்த்தம் என்ன?
உங்களை ஒருவர் சொல்லாமல் கொள்ளாமல் புறக்கணிக்கும் போது, உங்களது மனம் உங்களை அறியாமலேயே குற்ற உணர்வுக்குள் தள்ளப்படும். ஆனால், உளவியல் ரீதியாகக் கோஸ்டிங் செய்வதன் உண்மையான அர்த்தம் இதுதான்: “பிரச்சினை உங்களிடம் இல்லை, பிரச்சினை அவரிடம்தான் இருக்கிறது.”
கோஸ்டிங் என்பது உங்களது தகுதியைக் காட்டுவது அல்ல; மாறாக, உங்களை விட்டு ஓடிய நபரின் பலவீனத்தையும், அவரது மோசமான குணத்தையுமே அது அம்பலப்படுத்துகிறது.
அவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள்?
அதீத மனமுதிர்ச்சி இல்லாமை
உறவை நாகரிகமாக எப்படி முடிப்பது, ஒருவரிடம் எப்படிப் பேசிப் பிரிவது என்ற குறைந்தபட்ச மனமுதிர்ச்சி (Emotional Immaturity) கூட அந்த நபரிடம் இல்லை என்று அர்த்தம். உண்மை நிலவரத்தை உங்களிடம் நேருக்கு நேர் சொல்லும் தைரியம் இல்லாத கோழத்தனமே இதற்குக் காரணம்.
நேருக்கு நேர் பேசும் பயம்
“எனக்கு உங்களைப் பிடிக்கவில்லை” என்றோ அல்லது “நமக்குள் இது சரிவராது” என்றோ உங்களிடம் சொன்னால், எங்கே நீங்கள் அழுதுவிடுவீர்களோ அல்லது சண்டை போடுவீர்களோ என்று பயந்து (Fear of confrontation), தங்களது சுய பாதுகாப்பிற்காகப் பேசாமல் ஓடிவிடுகிறார்கள்.
அலட்சியம் மற்றும் சுயநலம்
உங்களது உணர்வுகளைப் பற்றியோ, அவர்களது இந்தத் திடீர் மறைவு உங்களை எவ்வளவு காயப்படுத்தும் என்பதைப் பற்றியோ கவலைப்படாத ஒரு சுயநலப் போக்கு (Lack of empathy) அவர்களிடம் இருக்கிறது. உங்களை ஒரு மனிதராகக் கூட மதிக்காத அலட்சியமே இதன் பின்னணியில் உள்ளது.
காயம்பட்ட மனதிற்கான ஒரு முக்கியப் பாடம்: கோஸ்டிங் என்பது அவர்கள் உங்களுக்குக் கொடுக்கும் ஒரு ‘மறைமுகப் பதில்’. “எனக்கு உங்களை மதிக்கத் தெரியவில்லை, உங்களது அன்பிற்கு நான் தகுதியானவன் அல்ல” என்று அவர்கள் வாயால் சொல்லாமல் தங்களது செயலால் காட்டுகிறார்கள். எனவே, வற்புறுத்திப் பெறப்படும் எந்தவொரு விளக்கமும் உங்களது காயத்தை ஆற்றப் போவதில்லை!
பாதிக்கப்பட்ட மனதின் வேதனையும் அதில் இருக்கும் ஆபத்தும்
கோஸ்டிங் ஏன் மற்ற நிராகரிப்புகளை விடக் கொடூரமானது என்றால், இதில் நமக்கு ‘குளோஷர்’ (Closure) எனப்படும் முறையான காரணம் கிடைப்பதில்லை.
- முடிவில்லாத கேள்விகள்: “ஏன் இப்படிச் செய்தார்?”, “நான் ஏதேனும் தப்பாகப் பேசிவிட்டேனா?” என்று மனம் ஒரு வட்டத்திற்குள் சுழன்றுகொண்டே இருக்கும்.
- சுய சந்தேகம்: இந்தத் தெளிவற்ற நிலை நமது சுயமதிப்பைக் (Self-esteem) குலைத்து, எதிர்காலத்தில் இன்னொரு மனிதரை நம்புவதற்கே ஒருவித பயத்தை நமக்குள்ளே உண்டாக்கிவிடும்.
இந்த ஏமாற்றத்திலிருந்து மீண்டு வருவது எப்படி?
- விளக்கம் தேடுவதை நிறுத்துங்கள்: அவரிடமிருந்து காரணத்தைக் கேட்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் மெசேஜ் செய்யாதீர்கள். அவர்களது மௌனமே மிகப்பெரிய இறுதிப் பதில்தான் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
- உங்களது எல்லையைக் காத்திடுங்கள்: ஒருவேளை சில வாரங்கள் கழித்து, எதுவுமே நடக்காதது போல அவரிடமிருந்து “ஹாய்” என்று மெசேஜ் வந்தால், உடனடியாக உருகிவிடாதீர்கள். உங்களை எளிதாகக் கையாண்ட நபருக்கு உங்களது வாழ்க்கையில் மீண்டும் இடம் தராமல் உங்களது சுயமரியாதையைக் காத்துக்கொள்ளுங்கள்.
- சுயநலம் அல்ல, சுய பாதுகாப்பு: உங்களை மதிக்காத ஒரு நபர் உங்களது வாழ்க்கையை விட்டுச் சென்றது ஒரு நன்மைகே என்று நினைத்து, உங்களை நேசிக்கும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகருங்கள்.
நன்றி: ஸ்ரீவித்யா மாரியப்பன், எழுத்தாளர் மற்றும் தொடர்பாடல் நிபுணர்
