ஹெல்த் டிப்ஸ்: காரில் போகும்போது வரும் வாந்தி… தடுப்பது எப்படி?

Published On:

| By christopher

கார்களில் செல்லும்போது, பலருக்கு வாந்தி, குமட்டல் உணர்வு ஏற்படுவது சகஜமான ஒன்று.

நிறையப் பேருக்குப் பின்பக்கம் அமர்ந்தால் மட்டுமே வாந்தி ஏற்படும். பயணங்களின்போது நம் உடலின் சமநிலை தவறும்போது, இந்த உணர்வு வரும்.

பயணங்களில் வாந்தி எடுப்பது ஒன்றும் பெரிய குறையெல்லாம் இல்லை. இதற்கு நம் மூளை சார்ந்தும் ஒரு விஷயம் சொல்லப்படுகிறது.

முக்கியமாக,  ‛வாந்தி வந்துடுமோ’ என்று நாம் அதையே நினைத்துப் பயணம் செய்து கொண்டிருந்தால் மட்டும்தான் வாந்தி வரும்.

நாம் அதைக் கண்டுகொள்ளவே செய்யாமல் வேறு சில விஷயங்களில் நம் மூளைக்கு வேலை கொடுத்தால், வாந்தி உணர்வு நிச்சயம் தடுக்கப்படும்.

அப்படியே வாந்தி உணர்வு வந்தால், முன்பக்க சீட்டில் இருப்பவர்களிடம் எக்ஸ்யூஸ் கேட்டு அமர்ந்து விடுங்கள். பெரும்பாலும் பின் சீட்டைவிட முன் சீட்டில் அமர்ந்து, பக்கவாட்டில் வேடிக்கை பார்க்காமல் முன்பக்க விண்ட் ஷீல்டு வழியாக, அதுவும் தூரமாக உங்கள் கவனத்தைச் செலுத்தினால் வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும், புத்தகம் படிப்பது, மொபைல் நோண்டுவது போன்ற விஷயங்களைத் தவிருங்கள். காதுகளை நன்றாக அடைத்துக்கொண்டு தூங்கும் நிலையில் பயணம் செய்தால், இந்த உணர்வைத் தடுக்கலாம்.

சிலர் ‛வாந்தி வந்துடும்’ என்று பயந்தே ஒன்றும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் பயணம் செய்வார்கள். இதுவும் தவறு.

வெறும் வயிறாக இருக்கும்போது, பயணங்களில் ஏற்படும் அசைவில் வயிற்றுப் புரட்டல் ஏற்படும். தேவையான அளவு உணவு உட்கொள்ள வேண்டும். அதேநேரம், வயிறு நிறைய சாப்பிடுவது தப்பு. இது வாந்தியோடு வயிறு கலக்கவும் செய்யும்.

பயணத்துக்கு முன் நல்ல பசு மோரில் இஞ்சி, கொத்தமல்லி, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்துப் போட்டுக் குடித்தால், வாந்தி குமட்டலைத் தவிர்க்கலாம்.

பயணத்தின்போது எலுமிச்சைப் பழத்தை லேசாகக் கடித்து ஓட்டை போட்டு, நுகர்ந்து கொண்டே வரலாம். நார்த்தங்காய்த் துண்டை வாயில் போட்டும் வாந்தியை நிறுத்தி வைக்கலாம்.

இரண்டு கடலை மிட்டாய் பர்பிகளை வாயில் போட்டுக் கொள்ளலாம். இதனால் உமிழ்நீர் எக்ஸ்ட்ராவாகச் சுரக்கும். குளுக்கோஸ் போடுவதற்குச் சமம் இது. உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.

இஞ்சி மிட்டாயும் முயற்சி செய்து பார்க்கலாம். மலைப் பயணங்களில் காற்று மாசு குறைவாகவே இருக்கும். எனவே, முடிந்தவரை காடுகளில் பயணிக்கும்போது ஜன்னலைத் திறந்துவிட்டு நல்ல காற்றைச் சுவாசித்துப் பயணித்தால் குமட்டல் உணர்வைத் தவிர்க்கலாம்.

இதைத் தாண்டி நாம் ஏற்கெனவே சொன்னபடி, இது மூளை சார்ந்த விஷயம்தான். அதனால் வாந்தி உணர்வு வந்தால் – கண்களை மூடி, உங்களுக்குப் பிடித்த விஷயங்களை / நபர்களை / நாஸ்டால்ஜியா நினைவுகளை மட்டும் அசைபோடுங்கள். ஆரோக்கியமாகப் பயணம் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : பாஜக கூட்டணி முதல்வர்கள் கூட்டம் முதல் ராகுல்காந்தி வழக்கு வரை!

பியூட்டி டிப்ஸ்: அழகுக்காக கான்டாக்ட் லென்ஸ் அணிபவரா நீங்கள்?

கிச்சன் கீர்த்தனா : மாங்காய் அடை

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share