வீட்டுக்கு வரும் மாங்காய்களை பழுக்கப் போடுவார்கள். அது எப்போது பழுக்கும் என்று தெரியாத நிலையில் அதைத் துண்டுகளாக்கி மாங்காய் அடை செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாங்காய் அடையை ருசித்துச் சாப்பிடுவார்கள்.
என்ன தேவை?
மாங்காய் – ஒன்று (துண்டுகள் போடவும்)
பச்சரிசி – ஒரு கப் (200 கிராம்)
காய்ந்த மிளகாய் – 7
இஞ்சி – சிறிய துண்டு
உருளைக்கிழங்கு – ஒன்று (தோல் சீவி, துருவவும்)
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் – அரை கப்
கல் உப்பு – முக்கால் டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
பச்சரிசியைக் கழுவி வெந்நீரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். காய்ந்த மிளகாய், இஞ்சி, மாங்காய்த் துண்டுகள், தேங்காய்த் துருவல், பச்சரிசியை கிரைண்டரில் கொரகொரப்பாக அரைத்து உப்பு போட்டுக் கலக்கி எடுக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய உருளைக்கிழங்கை மாவில் கலக்கவும்.
முதல் நாள் மாலை அரைத்து வைத்தால், மறுநாள் காலை அடை வார்க்கலாம். சுவையான மாங்காய் அடையைத் தக்காளிச் சட்னி அல்லது ஊறுகாயுடன் சூடாகப் பரிமாறவும்.