கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கப்படும் காய்கறி சூப் உடல் எடை குறைப்புக்கு (Weight Loss) உதவுகிறது.
தற்போதைய வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் உள்ளிட்டவை காரணமாக உடல் எடை அதிகரிக்கிறது. உடல் எடையைக் குறைப்பதற்காக மக்கள் பெரும்பாலும் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துகிறார்கள். அதேபோல உடல் எடை குறைப்புக்கு சூப் உதவும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. குறிப்பாக, காய்கறி சூப் (Vegetable detox soup), உடல் எடையைக் குறைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏனெனில், அது குறைந்த கலோரி கொண்ட உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்தை வழங்குவதோடு, நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வையும் தருகிறது.
காய்கறி சூப் தயாரிப்பது எப்படி?
காய்கற சூப் செய்ய முதலில் ஒரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது நெய்யை சூடாக்க வேண்டும். இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து சுவையை அதிகரிக்க லேசாக வதக்க வேண்டும். பிறகு கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் என உங்களுக்கு விருப்பமான நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் மிதமாக வதக்க வேண்டும். பின்னர், சுவைக்கு ஏற்ப தண்ணீர், உப்பு, மிளகு மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு (Lemon juice) சேர்க்க வேண்டும். 10-15 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். காய்கறிகள் மென்மையாகும் போது, சூப் தயாராகிவிடும்.
உடல் எடை குறைய உதவுகிறது
காய்கறி சூப்பில் கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், தக்காளி மற்றும் ப்ரோக்கோலி போன்ற பலவிதமான காய்கறிகள் சேர்க்கலாம். இந்தக் காய்கறிகள் அனைத்திலும் நார்ச்சத்து (high fiber soup) நிறைந்துள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. குறைவான கலோரிகளுடன் உடலுக்கு அதிக நார்ச்சத்து கிடைக்கும்போது, அது படிப்படியாக கொழுப்பை எரிக்கும் செயல்முறையைத் துரிதப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
காய்கறி சூப்பில் புரதம், வைட்டமின் சி, வைட்டமின் டி, துத்தநாகம், பீட்டா கரோட்டின் மற்றும் புரோபயாடிக்குகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை (Increases immunity) அதிகரிக்கின்றன. நோய்த்தொற்றுகள் மற்றும் அழற்சியை எதிர்த்துப் போராடவும், சளியை ஒழுங்குபடுத்தவும், காய்ச்சல் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகின்றன.
நோய்களின் அபாயத்தை குறைக்கிறது
சூப்பில் காய்கறிகள் அதிகமாக இருப்பதால் அவற்றில் ஊட்டச்சத்துக்களும் அதிகம் கிடைக்கின்றன. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது, நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைத்து, பொட்டாசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (Antioxidants) மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் காய்கறி சூப் வழங்குகின்றது.
அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க உதவுகிறது
சூப்கள் உடலுக்கு நீர்ச்சத்தையும் (Hydration) வயிறு நிரம்பிய உணர்வையும் தருவதால், சாப்பிடும் அளவைக் கட்டுப்படுத்துவது எளிதாகிறது. சூப்களில் உள்ள அதிக நீர்ச்சத்து வயிற்றை விரிவடையச் செய்து, விரைவாக வயிறு நிரம்பிய உணர்வைப் பெறவும், உணவின் போது அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் உதவுகிறது.
