தக்காளி ரசம், மிளகு ரசம் என வழக்கமான ரச வகைகளையே செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? வீட்டில் இருக்கும் புதினாவை வைத்து சுலபமாகவும் மணமாகவும் ஒரு புதினா ரசம் செய்து பார்க்கலாம். புளிப்பும் காரமும் கலந்த இந்த ரசம் சாதத்துடன் மட்டுமல்லாமல், தனியாகவும் பருகுவதற்கு ஏற்றதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
ஒரு கைப்பிடி புதினா இலைகள், சிறிய நெல்லிக்காய் அளவு புளி, ஒரு தக்காளி, 5 பூண்டு பற்கள், ஒரு டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் மிளகு, 2 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் பெருங்காயத் தூள், கடுகு, உளுத்தம் பருப்பு தலா அரை டீஸ்பூன், ஒரு டேபிள்ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய், உப்பு மற்றும் கொத்தமல்லி தேவைப்படும்.
புதினாவை இப்படித்தான் அரைக்கணும்!
சுத்தம் செய்த புதினா இலைகளுடன் சீரகம், மிளகு, பூண்டு, ஒரு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
புதினாவை மிகவும் மையாக அரைத்து பேஸ்ட் போல மாற்றாமல் இருப்பது நல்லது. இதனால் ரசத்தில் புதினாவின் வாசனையும் சுவையும் நன்றாக இருக்கும்.
ரசம் வைக்கும் முறை
புளியைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதில் தக்காளியைப் பிசைந்து சேர்க்கவும். பின்னர் மஞ்சள் தூள், உப்பு, அரைத்த புதினா கலவை மற்றும் சுமார் 2 கப் தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் நெய் அல்லது நல்லெண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். இதில் ரசக் கலவையை ஊற்றி மிதமான தீயில் சூடாக்க வேண்டும்.
ரசம் நன்றாகக் கொதித்து தளதளவென பொங்க விடக்கூடாது. ஓரங்களில் நுரை தோன்றி லேசாகக் கொதிக்கும்போதே அடுப்பை அணைத்து, இறுதியாக கொத்தமல்லி தூவினால் மணக்கும் புதினா ரசம் தயார்.
