நடிகர் மனோஜ் பாரதிராஜா திடீர் மரணமடைந்துள்ளது தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த வாரம் தான் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.how manoj become actor?
பிரபல புகைப்பட கலைஞர் கலைமாமணி யோகா எழுதிய இயக்குநர் இமயத்துடன் 25 வருட இனிய நினைவுகள் என்ற புத்தகத்தில் மனோஜ் நடிகரானது பற்றிய சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார். அதில்,
பல நடிகர், நடிகைகளை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் பாரதிராஜா தன் மகனை அறிமுகப்படுத்தி எடுத்த படம் தான் தாஜ்மகால். பாரதிராஜா எந்த நடிகர், நடிகைகளையும் அறிமுகப்படுத்தும் போது, மூவி டெஸ்ட் எடுத்து பார்த்ததில்லை. ஆனால், மனோஜுக்கு மூவி டெஸ்ட் எடுத்து பார்த்து திருப்தியடைந்த பின்னரே, ஹீரோவாக்கினார்.
இது குறித்து, அப்போது பாரதிராஜா கூறுகையில், “நான் நடிக்க ஆசைப்பட்டு வந்து சந்தர்ப்ப சூழலால் இயக்குநராக மாறினேன். ஆனால், என் மகன் இயக்குநராக ஆசைப்பட்டு, மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி இன்று நடிகனாகி உங்கள் முன்னால் நிற்கிறான். அவனிடம் திறமை, ஆர்வம் துடிப்பு என அனைத்துமே உள்ளது” என்று கூறியிருந்தார்.
ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன் தந்தையுடன் சென்று திமுக தலைவர் கலைஞரை சந்தித்து அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றார் மனோஜ்.
தாஜ்மகால் படத்தின் தொடக்க விழா ஒரு படத்தின் வெற்றி விழா போலவே பிரமாண்டமாக நடந்தது. 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ம் ஆண்டு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் பிரமாண்ட விழா நடைபெற்றது.
இயக்குநர்கள் பாலச்சந்தர், மணிரத்னம், ராஜீவ் மேனன், பாக்கியராஜ் மற்றும் நல்லி குப்புசாமி செட்டியார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குத்துவிளக்கேற்றி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பாலச்சந்தர், “முதன்முறையாக ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தி வைத்த போது என் மனதுக்குள் என்ன உணர்வு இருந்ததோ, அதே உணர்வுடன் இன்று மனோஜை நடிகராக அறிமுகப்படுத்தி வைக்கிறேன். வருங்காலத்தில் மனோஜ் பல வெற்றிகளை குவிப்பார் ‘ என்று மனதார வாழ்த்தினார்.how manoj become actor?
தமிழ் திரையுலகில் எந்த ஒரு திரைப்படத்தின் தொடக்க விழாவும் இத்தனை பிரம்மாண்டமாக நடந்திருக்காது என்கிற வகையில், மனோஜின் அறிமுகம் திரையுலகில் இருந்தது.
நிகழ்ச்சி நல்லமுறையில் சிறப்பாக நடந்து முடிந்ததால் பாரதிராஜா மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திக் காட்டிய சக நடிகர்கள், நண்பர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் பாரதிராஜா அமராவதி ஹோட்டலில் விருந்து வைத்து மகிழ்ந்தார்.
இவ்வாறு அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.